தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் இந்த வருடம் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 6.7.2019 சனிக்கிழமை யேர்மனியின் தென்மாநிலத்தில் உள்ள தமிழாலயங்களை இணைத்து புறுக்ஸ்சால் என்னும் நகரத்தில் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்டது.
ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு, யேர்மனியத் தேசியக் கொடியுடன் தமிழீழத் தேசியக் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது. பின்பு தமிழ்க் கல்விக் கழகக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு விளையாட்டு வீர வீராங்கணைகளினால் ஒலிம்பிக் தீபம் மைதானத்தைச்சுற்றி ஏந்திவந்து ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளின் அணிவகுப்புக்கள் ஆரம்பமாகின.
அணிவகுப்பில் பங்குபற்றிய அத்தனை மாணவ மாணவிகளும் மிகக் கம்பீரமான தோற்றத்துடன் அணிவகுத்து வந்து தேசியக் கொடிகளுக்கு மரியாதை செலுத்தி சென்றனர். யார் முதலிடம் என்று தேர்ந்தெடுக்க முடியாத நிலையில் அணிவகுப்புக்களை நடுவம் செய்த நடுவர்கள் நின்றிருந்தனர். அந்த அளவுக்கு மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மிகச்சிறப்பாக இருந்தது. இருப்பினும் ஓரிரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் நடுவர்களால் அணிவகுப்பில் பங்குபற்றியவர்களுக்கு முடிவுகள் கொடுக்கப்பட்டது.
https://youtu.be/MJ3zCXp4YAU
அந்த வகையில் பெண்கள் பிரிவில் முதலாம் இடத்தை முன்சன் தமிழாலயமும், இரண்டாவது இடத்தை ஸ்ருட்காட் தமிழாலயமும், மூன்றாவது இடத்தை சின்டில்பிங்கன் தமிழாலயமும் பெற்றுக் கொண்டனர். ஆண்கள் அணியில் முதலாம் இடத்தை முன்சன் தமிழாலயமும், இரண்டாவது இடத்தை ஸ்ருட்காட் தமிழாலயமும் பெற்றுக்கொண்டனர். பின்பு இவர்களுக்கான வெற்றிப் பதக்கங்களும், வெற்றிக் கேடயங்களும் பொறுப்பாளர்களால் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
https://youtu.be/XwYx1agy6jM
இதனைத் தொடர்ந்து மற்றைய விளையாட்டுக்கள் ஆரம்பமாகி மிகச்சிறப்பாக நடைபெற்றது. வெற்றி பெற்ற வீர வீராங்கணைகளுக்கான வெற்றிப்பதக்கங்கள் அந்தந்த உடனேயே சிறப்பாக அமைக்கப் பட்டிருந்த இடத்தில் தமிழாலயங்களின் செயற்பாட்டாளர்களால் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
இறுதியாக ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு ஓட்டம் நடைபெற்றது. சிறு குழந்தைகள் தமது மழலைப் பாதங்களால் 50 மீற்றர் தூரத்தை ஓடிவந்த காட்சி குதூகலமாக இருந்தது. ஓடிவந்த குழந்தைகளுக்கு தமிழாலய ஆசிரியர்கள் இனிப்பு வகைகள் கொடுத்து வரவேற்றனர்.
https://youtu.be/WWOkMOG8ERE
பின்பு மிகச்சிறந்த போட்டியாளர்களைத் தேர்ந்து எடுத்து, சிறப்புக் கேடயங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. அத்தோடு 14 தமிழாலயங்கள் பங்குபற்றிருந்த இவ் விளையாட்டுப் போட்டிகளில் புள்ளிகள் அடிப்படையில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற தமிழாலயங்களுக்குச் சிறப்புக் கேடயங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
https://youtu.be/DXu3P9J25Ck
அந்த வகையில்
456 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தை ஸ்ருட்காட் தமிழாலயமும்
439 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை முன்சன் தமிழாலயமும்
358 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தை ருட்லிங்கள் தமிழாலயமும் பெற்றுக்கொண்டன.
பின்பு தேசியக்கொடிகள் இறக்கிவைக்கப்பட்டு “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்னும் எழுச்சிப்பாடல் ஒலிக்க விடப்பட்டு விளையாட்டுப் போட்டி நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.