நாட்டிலுள்ள சிறுபான்மையினரின் வாக்குகள் அவசியமில்லையென பொதுஜன முன்னணி கூறியதாக பொய்யான பிரசாரங்களை ஏனைய கட்சிகள் முன்னெடுப்பதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் நேற்று) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“எந்ததொரு அரசியல் கட்சிகளும் வாக்குகளை வேண்டாமென ஒருபோதும் கூறுவதில்லை.
மேலும் அரசியல் கட்சியொன்றுக்கு அனைத்து இன மக்களினதும் வாக்குகள் மிகவும் அவசியமாகும்.
ஆனால் சில கட்சிகள் எமது கட்சிப்பற்றி அவதூறு பரப்பும் வகையில் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றது.
இதேவேளை நாட்டின் ஏனைய பிரச்சினைகள் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றினை பார்க்கும்போது 4 வருட காலத்தில் நாட்டை சீரழிக்க முடியுமா என்ற ஆச்சரியத்தை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னரும் இத்தகைய பிரச்சினைகள் காணப்பட்டபோது அதற்கு உடனடியான தீர்வை எமது அரசாங்கம் வழங்கியது. ஆனால் தற்போதைய அரசாங்கம் பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றது.
இதேவேளை யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் பின்னர் அபிவிருத்திகளை இலக்காகக் கொண்டு செயற்பட்டோம். அதன்போது 30 வருட கால யுத்தத்தினால் எவ்வித அபிவிருத்தியும் இன்றி காணப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் உள்நாட்டு விவகாரங்களில் இன்றும் சர்வதேச தலையீடுகள் காணப்படுகின்றன. ஆகையால் நாட்டிலுள்ள புத்திஜீவிகள் நாட்டை நேசிக்கும் அனைவரும் இதற்கு எதிராக போராட வேண்டும்” என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.