ஜெய்ப்பூரை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திருப்பது மிகவும் பெருமைக்குரிய தருணம் என பிரதமர் மோடி டுவிட்டர் மூலம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரம் ‘மதில் சூழ்ந்த நகரம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள தனித்துவமான கட்டிடங்களும், உற்சாகமான கலாசாரமும், மக்களின் விருந்தோம்பலும் உலகளவில் சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக உள்ளது. இந்த நகரை நினைவிடங்கள் மற்றும் தலங்களுக்கான சர்வதேச குழு கடந்த ஆண்டு ஆய்வு செய்து, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடத்துக்கான பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்தது.
அஜர்பைஜான் நாட்டில் உள்ள பாகு நகரில் கடந்த ஜூன் 30-ந் தேதி தொடங்கி நடைபெற்றுவரும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய கமிட்டியின் 43-வது மாநாட்டில் இந்த விண்ணப்பம் நேற்று பரிசீலனை செய்யப்பட்டது. பரிசீலனைக்கு பின்னர் ஜெய்ப்பூரை உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்தது.
பிரதமர் நரேந்திர மோடி, “ஜெய்ப்பூர் நகரை உலக பாரம்பரிய இடமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்” என்று டுவிட்டர் மூலம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், ‘பிங்க் சிட்டி’ ஜெய்ப்பூரை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திருப்பது மிகவும் பெருமைக்குரிய தருணம். இது ராஜஸ்தான் தலைநகருக்கு கிடைத்துள்ள மற்றொரு மகுடம் என்றார்.
இதுவரை 167 நாடுகளில் உள்ள 1,092 இடங்கள் உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.