ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் மண்டியிட வேண்டிய தேவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இல்லை என்று தெரிவித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி – மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் என்ற தீர்மானத்திற்கு பொதுஜன பெரமுன இணங்காவிட்டால் தனித்து பயணிப்போம் என்றும் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைத்து அமைப்பதற்கு எதிர்பார்த்துள்ள கூட்டணிக்கு ‘ ஸ்ரீலங்கா சுதந்திர மக்கள் முன்னணி (ஸ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன பெரமுன) ‘ என்ற பெயருக்கு இருதரப்பிலும் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார். எனினும் பொதுஜன பெரமுன அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ராஜபக்ஷ குடும்பத்தினர் வேண்டாம் என்று தான் 2015 ஆம் ஆண்டு மக்கள் அவர்களை தோல்வியடையச் செய்தார்கள். மீண்டும் அதே நிலைமையை உருவாக்க வாய்ப்பளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.