தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் குழு மோதலில், ஈடுபட்ட இஸ்லாமிய கற்கைகள், அரபுமொழி பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலருக்கு எதிராக, கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள், அரபுமொழி பீடத்துக்கான யூனியனுக்குரிய நிர்வாகத்தைத் தெரிவுசெய்வதற்கு நடத்தப்பட்ட தேர்தலையடுத்து, அந்தப் பீடத்தின் மாணவர் குழுக்களிடையே கடந்த செவ்வாய்கிழமை (2) இரவு, அடாவடி சண்டைகள் இடம்பெற்றன.
இதையடுத்து, மோதலில் ஈடுபட்டவர்களில் 07 மாணவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதி பெற்று, மறுநாள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினர்.
இதையடுத்து, இவ்விவகாரம் தொடர்பில், பல்வேறு ஊடகங்களும் செய்திகளை வெளிட்ட நிலையிலேயே குறித்த மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் வாரம், அவர்களில் ஆகக் குறைந்தது 07 பேருக்கு கல்வித் தடை விதிக்கப்படுவதோடு, அவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கும் தீர்மானத்தை பல்கலைக்கழக நிர்வாகம் எடுப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும் தெரியவருகிறது.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து செய்தி சேகரித்த ஊடகவியலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தியவர்கள் தொடர்பாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.