நாட்டில் தற்போது இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு இன ரீதியிலான பாடசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டமையும் ஒரு முக்கியமான காரணமென அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
அத்தோடு, மலையகத் தலைவர்களே, அதிகாரப் பரவலாக்கலை நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று முதன் முதலாக வலியுத்தினார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் தற்போது இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், அன்று இருக்கவில்லை. இதற்கு இன ரீதியிலான பாடசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டமையும் ஒரு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. இதற்கு அரசியல்வாதிகள் பொறுப்புக்கூறியே ஆகவேண்டும்.
1940 களில் இலங்கை செல்வந்தம் மிக்க நாடாகத்தான் இருந்தது. உலகப்போரின்போது பிரித்தானியாவுக்குக்கூட நாம் கடன் வழங்கியிருந்தோம். ஒரு ரூபாய்கூட அன்று நாம் சர்வதேசத்திலிருந்து கடன் பெற்றுக்கொள்ளவில்லை.
ஆனால், இந்த நிலைமை சுதந்திரத்திற்குப் பின்னர் அப்படியே தலைக்கீழாக மாறிவிட்டது. அதிகாரத்தை கைப்பற்றும் போட்டியில், ஒற்றுமையாக இருந்த மக்களை இன, மத, ரீதியாக அப்போதைய ஆட்சியாளர்கள் பிரித்தார்கள். இதனால்தான் இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
சுதந்திரம் கிடைத்தவுடன் அதிகாரப் பரவலாக்கலை மேற்கொண்டிருந்தால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது. இந்தியாவில் அவ்வாறுதான் இடம்பெற்றது.
நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தவுடன், பிரிக்கப்பட்ட பிராந்தியங்களும் அங்கு சுதந்திரம் அடைந்தன. இதனால் பிரச்சினைகள் ஏற்படவில்லை.
எனினும், எமது நாட்டில் சுதந்திரத்திற்குப் பின்னர்தான் அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
உண்மையில், மலையக தலைவர்கள்தான் முதன் முதலில், இந்தியாவில் இருப்பதைப் போல அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ள வேண்டும் என்று அப்போது வலியுறுத்தியிருந்தார்கள்” என மேலும் தெரிவித்தார்.