முஸ்லீம்களை கண்மூடித்தனமாக கைதுசெய்வது உட்பட அவர்களிற்கு எதிரான அனைத்து துஸ்பிரயோகங்களையும் இலங்கை அரசாங்கம் முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பௌத்த தேசியவாதிகளால் முஸ்லீம்களின் அடிப்படை உரிமைகளை மீறும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதுடன் தாக்குதல்களும் ஏனைய துஸ்பிரயோகங்களும் இடம்பெற்றுள்ளன என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்திற்கு தனது பிரஜைகளை பாதுகாக்கவேண்டிய தேவையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமானவர்களை நீதிவிசாரணைக்கு உட்படுத்தவேண்டிய அவசியமும் உள்ளது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி ஆனால் இந்த குற்றங்களிற்காக அரசாங்கம் முஸ்லீம் சமூகத்தை தண்டிக்கவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முஸ்லீம்களிற்கு எதிராக இடம்பெறும் கும்பல்களின் வன்முறைகள் அந்த சமூகத்தினரிற்கு எதிரான அச்சுறுத்தல்கள் ஒடுக்குமுறைகளிற்கு அதிகாரிகள் துரிதமாக முடிவை காணவேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளின் பின்னர் அதிகாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கண்மூடித்தனமாக கைதுசெய்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைத்துள்ளனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
பெருமளவானவர்கள் அரசாங்கம் தான் நீக்குவதாக ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு வாக்குறுதியளித்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழேயே தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என சட்டத்தரணிகளும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தெரிவித்துள்ளனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமற்ற நிலையில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
தேடுதல் நடவடிக்கையின் போது குரானை வைத்திருந்தமைக்காகவும் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் அனைத்து பிரஜைகளினதும் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசாங்கம் உடனடியாகவும் பக்கச்சார்பற்ற விதத்திலும் சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கை அரசாங்கம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே நீண்ட கால அளவில் மனித உரிமை துஸ்பிரயோகங்களை முடிவிற்கு கொண்டுவருவதற்கு அவசியம் எனவும் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
பல இலங்கையர்கள் அனுபவித்த இனவன்முறையும் மனித உரிமை மீறல்களும் தற்போது முஸ்லீம்களிற்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படுகின்றது என மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.