நள்ளிரவு முதல் தொடங்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக கோட்டை புகையிரத நிலையம் மற்றும் ஏனைய புகையிரத நிலையங்களிலும் எந்த ரயில்களும் இயங்கவில்லை என இலங்கை சுதந்திர ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் நதீர மனோஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நேற்று நள்ளிரவுக்கு முன்னர் பயணங்களைத் தொடங்கிய இரவு அஞ்சல் ரயில்கள் உட்பட பல ரயில்கள் இன்று காலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்து அடைந்தன.
எனினும் நள்ளிரவுக்கு பின்னர் நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களும் மூடப்பட்டுவிட்டன, இதனால் ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
ரயில்வே துறை மற்றும் கோட்டை ரயில்வே ஊழியர்கள் அனைவரும் வேலையை நிறுத்திவிட்டு, அவற்றுடன் தொடர்புடைய பணிநிலையங்களில் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
புகையிரத சேவைகள் ஒழுங்கமைப்பு பிரதானயின் முறையற்ற செயற்பாடுகளின் காரணமாகவே அவர் புகையிரத பொது முகாமையாளரினால் பதவி நீக்கபட்டார். இவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொறுப்பு வாய்ந்த தரப்பினரிடம் குறிப்பிட்டும் எவரும் பொருட்படுத்தவில்லை.
மாறாக பதவி நீக்கம் செய்யப்பட்டவரை மீள பதவியில் இணைத்துக் கொள்ளுமாறு போக்குவரத்து அமைச்சினால் புகையிரத பொது முகாமையாளருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. இதன் காரணமாகவே நாங்கள் பணிப்கிஷ்கரிப்பினை முன்னெடுத்து வருகன்றோம்.
அத்துடன் இந்தப் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொள்ள குறித்த அமைச்சு எமக்கு இதுவரை எந்த அழைப்பும் விடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக கருதி வர்த்தமானி வெளியிட்ட நிலையிலும் புகையிரத தொழிற்சங்கத்தினரின் இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக பொதுமக்களும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.