காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் நடத்திய போராட்டத்தை தமிழரசுக் கட்சியினர் கொச்சைப்படுத்தியமை ஏற்றுக்கொள்ள முடியாதென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சியின் மாநாடு அண்மையில் யாழில் இடம்பெற்றது. இதன்போது காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
இந்த போராட்டம் தொடர்பாக யாழில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “தமிழ் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கும் ஒரு இடத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தை நடத்தியிருந்தமை அவர்களின் உள்ளக்கிடக்கைகளின் வெளிப்பாடாகவே அமைகிறது. இதற்கு முன்னரும் இவ்வாறான போராட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மது அருந்தியிருந்ததாகவும் பணம் பெற்று போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தமிழரசுக் கட்சியினர் கூறியிருந்தனர்.
மக்களின் போராட்டத்தை தமிழரசுக் கட்சினர் சொச்சைத்தனமாக பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது” என மேலும் தெரிவித்துள்ளார்.