தமிழ் மக்களின் உரிமைக்காகவே ஆயுதமேந்தி போராடிய விடுதலைப்புலிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேவலப்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கம் போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலமாகவே பொருளாதார பலத்தைப் பெற்றார்கள் என ஜனாதிபதி நேற்று முன்தினம் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த கருத்திற்கு பதிலளிக்கும் முகமாகவே பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்துள்ள அவர், “தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதிவரை கொள்கைக்காக போராடி மரணித்தார்கள். அப்படிப்பட்ட விடுதலைப்புலிகளை போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபடுத்தி கேவலப்படுத்த முனைவது முட்டாள்தனமான செயல்.
புலிகளின் தலைவர் மது போதையை விரும்பாதவர், அதற்கு எதிரானவர். போர்காலத்தில் இது நமக்கு நன்கு தெரியும்.
அவர்களின் ஆயுத போராட்டத்திற்கு இந்தியா, கனடா, சுவிஸ், லண்டன், அமெரிக்கா, பிரான்ஸ் என சர்வதேச நாடுகளில் வாழும் தமிழர்கள் நிதியுதவிகளை வழங்கினார்கள்.
அந்த நிதிகளின் மூலமே போராட்டத்தை பிரபாகரன் முன்னெடுத்தார். அந்த நிதிகளின் மூலமே நவீன ரக ஆயுதங்களைகூட வெளிநாடுகளில் இருந்து புலிகள் கொள்வனவு செய்தனர்.
இன்றும் கூட புலம்பெயர் அமைப்புக்கள் புலிகளின் நினைவு தினங்களை பெருந்தொகை பணம் செலவிட்டு பெருவிழாவாக நடாத்தி வருகின்றார்கள்.
புலிகளின் காலத்தில் வடக்கில் போதைப்பொருள் விற்பனை கொடிகட்டி பறக்கவில்லை. போர் நிறைவுக்கு வந்த பின்னரே வடக்கில் போதைப்பொருள் பாவனையும் விற்பனையும் தலைவிரித்தாடுகிறது. இதனை ஜனாதிபதி கவனத்திற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.