ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை-விக்னேஸ்வரன்

317 0
கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தின்போது யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியில் 75 ஏக்கர் காணியில் ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டதாக வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்த பிறகு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த போது ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ள பகுதியை மக்களிடம் ஒப்படைப்பதாக வாக்குறுதி அளித்திருப்பினும் அவர் அதனை நிறைவேற்றவில்லை எனவும் சி. வி. விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடமாகாணத்தினுள் 60,000 ஏக்கர் பொது மக்களின் காணிகள் தொடர்ந்தும் பாதுகாப்பு பிரிவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று (02) யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை வலி. வடக்கு ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள பொதுமக்களின் தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பிலான சந்திப்பு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் தலைமையில் நேற்று (02) தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

பொது மக்களுடைய தனியார் காணிகள் மீண்டும் பொதுமக்களிடமே கையளிக்க வேண்டும் என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமைய பாதுகாப்பு படைகளின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் செயற்பாடுகள் மீண்டும் வட மாகாண ஆளுநரின் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

இதன் முதற்கட்டமாக ஜனாதிபதி மாளிகை மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களை நான்கு வலயங்களாக பிரித்து அதன் முதற்கட்டமாக 62 ஏக்கர் காணியினை அளந்து அப்பிரதேசத்தின் உரிமையாளர்களை இணங்காணுவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் வியாழக்கிழமை (04) இடம்பெறவுள்ளது.

இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஆளுநர் பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து துரிதமாக அக்காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து ஆளுநர் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.