சீனாவின் சிகரெட்டுக்களை இலங்கைக்கு இறக்குமதி செய்யும் விடயம் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களான மங்கள சமரவீரவிற்கும் ராஜித சேனாரட்னவுக்குமிடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன சீனாவிலிருந்து சிகரெட்டுக்களை இலங்கைக்கு இறக்குமதி தீர்மானத்தை நிதி அமைச்சர் வாபஸ்பெறவேண்டும். இவ்வாறு இறக்குமதி செய்வது சிகரெட் பாவனையை அதிகரிப்பதற்கு உதவும். எனவே இதற்கு அனுமதிக்க முடியாது என்று வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் மங்கள சமரவீர சீனாவிலிருந்து சட்டவிரோதமாக பெருமளவான சிகரெட்டுக்கள் இலங்கைக்கு கொண்டு கொணடுவரப்படுகின்றன. இதற்கு பதிலடியாகவே சட்டவிரோத நடவடிக்கையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காகவே சட்டபூர்வமாக சிகரெட்டுக்களை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டது. இலங்கை புகையிலை நிறுவனமானது சீனாவில் சிகரெட்டுக்கள் இறக்குமதி செய்யப்பட்டால் தமது வியாபாரம் பாதிக்கப்படும் என்பதனால் பலதரப்பினரையும் அணுகிவருகின்றனர். இதன் காரணமாக எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த விடயத்தில் நான் உங்களை குறிப்பிடவில்லை என்று தெரிவித்திருக்கின்றார்.
இதன்போது கருத்துரைத்த அமைச்சர் ராஜித சேனாரட்ன நாம் உலக சுகாதார அமைப்பின் புகையிலைக்கு எதிரான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றோம். இந்த நிலையில் சீனாவிலிருந்து சிகரெட்டுக்கள் இறக்குமதி செய்யப்பட்டால் அதன் பாவனை அதிகரிக்கும். அத்துடன் உலக சுகாதார நிறுவனத்திற்கு நாம் பதிலளிக்க முடியாது போகும். இதனால் தான் நாம் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனாவிலிருந்து பெருமளவான உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருகின்றனர். அவர்களுக்கு ஏற்றவசதிகள் இங்கு செய்துகொடுக்கப்படவேண்டும். அவர்கள் இலங்கை வந்ததும் தமது நாட்டு சிகரெட்டுக்களையே கோரிநிற்கின்றனர். எனவே இவ்வாறு உல்லாசப் பயணத்துறையை வளர்ச்சியடைய செய்யவேண்டுமானால் இத்தகைய சில முடிவுகளை எடுக்கவேண்டும் என்று அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருக்கின்றார்.
இரு அமைச்சர்களுக்குமிடையிலான கருத்து முரண்பாட்டை அடுத்து இந்த விடயம் குறித்து அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை. அடுத்தவாரத்தில் இது குறித்து தீர்மானம் எடுப்பது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.