முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமான பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசல் மற்றும் அதன் அருகிலிருக்கும் குப்பதுஸ் ஸஹ்ரா பள்ளிவாசல் முஸ்லிம்களின் தனி உரிமை என்றும், அவை உலக முஸ்லிம்களின் பொதுச் சொத்து என்றும் யுனெஸ்கோ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், பைத்துல் முகத்திஸிற்கு யூதர்களிற்கு மத அடிப்படையிலும், வரலாற்று அடிப்படையிலும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற யுனெஸ்கோவின் தீர்மானம் தொடர்பாக 58 அங்கத்துவ நாடுகளிடையே வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் இலங்கை நடுநிலை வகித்தமை பலஸ்தீன் தொடர்பாக இலங்கை அரசு காலாகாலமாக கொண்டுள்ள வெளிநாட்டு கொள்கையில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இங்கு கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார்.
கடந்த காலங்களில் பலஸ்தீனுக்கு ஆதரவாக செயற்பட்ட இலங்கை அரசாங்கம் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சியின் போது இஸ்ரேலிய தூதரகத்தை அகற்றிய சம்பவத்தை நினைவு படுத்திய முன்னாள் அமைச்சர், தற்போது இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை யாது என கேள்வி எழுப்பவேண்டியுள்ளது என குறிப்பிட்டார். இது அணிசேரா நாடுகளின் அமைப்பின் கொள்கைக்கு விரோதம் என தெரிவித்த அவர் பாராளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களிடம் இது தொடர்பாக பதிலளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த வியாழனன்று பாரிசிலுள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் 26 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தும், 26 நாடுகள் வாக்கெடுப்பில் இருந்து தவிர்ந்துகொண்டதோடு 6 நாடுகள் பிரேரணைக்கு எதிராகவும் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.