பிரான்சில் மிகச் சிறப்பாக ஆரம்பமாகியுள்ள தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் தெரிவுப் போட்டிகள்! ­

616 0

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் பிரான்சு தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகமும் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நடாத்திய பிரான்சு தமிழ்ச்சோலை பள்ளிகளுக்கிடையேயான இல்லமெய்வல்லுநர் தெரிவுப்போட்டிகள் நேற்று (30.06.2019) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு சார்சல் CENTRE SPORTIF NELSON MANDELA மைதானத்தில் சிறப்பாக ஆரம்பமாகியது.

ஆரம்ப நிகழ்வாக குறித்த மைதானப் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் லெப்ரினன்ட் சங்கர் அவர்களின் நினைவுத் தூபியின் முன்பாக அகவணக்கம் செலுத்தப்பட்டு சுடர்ஏற்றப்பட்டது. சுடரினை பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் பொறுப்பாளர் திரு. ஜெயக்குமார் அவர்களும் கார்ஜ் சார்சல் பிராங்கோ தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர் திரு.டக்ளஸ் அவர்களும் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து செயற்பாட்டாளர்கள் மலர்வணக்கம் செலுத்தினர். அதனையடுத்து போட்டி முகாமையாளர் திரு. இ.இராஜலிங்கம் அவர்கள் போட்டிகளை ஆரம்பித்துவைத்தார்.

பிரான்சில் தற்போது கடும் வெப்பமான காலநிலை நிலவுகின்றபோதும் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்துகொண்டதைக் காணமுடிந்தது. சோதியா இல்லம் (சிவப்பு), அங்கையற்கண்ணி இல்லம் (நீலம்), ராதா இல்லம் (மஞ்சள்), மாலதி இல்லம் (செம்மஞ்சள்), சார்ள்ஸ் இல்லம் (பச்சை), ஜெயந்தன் இல்லம் (ஊதா)ஆகிய இல்லங்களிடையே ஓட்டம், சாக்கோட்டம், வேகநடை, கயிறடித்தல், உயரம் பாய்தல், நீளம் பாய்தல், பந்தெறிதல், முப்பாய்ச்சல் போன்ற விளையாட்டுப் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றியிருந்தன. பெரும் எண்ணிக்கையான பெற்றோர்கள் இப்போட்டிகளில் கலந்துகொண்டு தமது குழந்தைகளுக்கு உற்சாக மூட்டிய தைக் காணமுடிந்தது. தொடர்ந்து எதிர்வரும் 06.07.2019 சனிக்கிழமை தெரிவுப்போட்டிகளும் 07.07.2019 ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டியும் இடம்பெறவுள்ளன. போட்டிகள் யாவும் காலை 9.00 மணிக்கு சார்சல் நெல்சன் மண்டேலா மைதானத்தில் இருதினங்களும் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. புலம்பெயர் மண்ணில் எமது தமிழ் சிறார்களின் திறமைகளை கண்டு வியந்து மகிழ அனைவரையும் வருமாறு போட்டி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)