ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்கரவாதி சஹ்ரானின் பெயரை கல்முனை ஆதார வைத்தியசாலையுடன் இணைத்து பொய் செய்தி வெளியிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் சுமார் 18 பேரைத் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.
இனவாதத்தையும் இன முரண்பாட்டையும் தோற்றுவிக்கும் நோக்கிலும் வைத்தியசாலைக்கு அவதூறு ஏற்படுத்தும் விதத்திலும் நடக்காத ஒரு சம்பவத்தை நடந்ததாகக் கூறி போலிச்செய்தியை வெளியிட்டதாக கல்முனை ஆதார வைத்தியசாலை நிருவாகம் கல்முனை பொலிஸ் நிலையத்திலும் சி.ஐ.டி.யினரிடமும் எழுத்துமூல முறைப்பாட்டைச் சமர்ப்பித்துள்ளது.
மேலும் சுகாதார அமைச்சுக்கும் தாதியஉத்தியோகத்தர்கள் சங்கத்துக்கும் முறையிடப்பட்டுள்ளது.
அதற்கமைய இரு தரப்பினரும் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களைத் தேடி வலைவிரித்துள்ளனர். இன்றோ நாளையோ அவர்கள் கைது செய்யப்படலாமெனத் தெரியவருகிறது.
அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாவிடின் வீதியில் இறங்கவிருப்பதாக ஊழியர்கள் கூறுகின்ற அதேவேளை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அறிவிப்போம் என நிருவாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது;
கல்முனை ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்ணொருவருக்கு குழந்தை பிறந்ததாகவும் அக்குழந்தை சஹ்ரான் போலிருப்பதாக தாதிய உத்தியோகத்தர் சொன்னதாகவும் அவருக்கு குழந்தையின் தந்தை அடித்ததாகவும் இதனையறிந்து வைத்தியசாலை நிருவாகம் குறித்த தாதிய உத்தியோகத்தரை வேலையிலிருந்து தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும் இணையத்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வெளிவந்தன.
அப்படி அங்கு ஒரு சம்பவம் நடக்கவில்லையெனவும் அப்படி எந்தத் தாதியஉத்தியோகத்தரை இடைநிறுத்தவில்லையெனவும் தெரிவித்த வைத்தியசாலை நிருவாகம், வேண்டுமென்றே இனவாத நோக்கில் அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்ட அந்தச் செய்தி பொய்யானது எனவும் போலியானது எனவும் கூறி முறைப்பாட்டைத் தொடர்ந்துள்ளது.
இந்தப் போலிச்செய்தியை வெளியிட்ட வர்கள், பரப்பியவர்கள் என்ற போர்வையில் சுமார் 18 பேரின் பெயர்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேலும் பயங்கரவாதத்துடன் தொடர் புடைய போலி இணைய சமூக வலைத்தள முறைப்பாட்டுப் பிரிவுக்கும் முறையிடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித் துள்ளார்கள்.