சமூக வலைதளத்தில் பதிவிட்டது எனது சொந்த கருத்து அல்ல. மக்களின் பார்வைதான் என்று தெரிவித்திருந்தேன் என்று கவர்னர் கிரண்பெடி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து சமூக வலைதளத்தில் கருத்துபதிவிட்ட கவர்னர் கிரண்பெடி மோசமான நிர்வாகம், ஊழல் அரசியல், மக்களின் சுயநலம், கோழைத்தன்மையே இதற்கு காரணம் என்று பதிவிட்டிருந்தார்.
கவர்னர் கிரண்பெடியின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த பிரச்சினை தமிழக சட்டசபையிலும் எதிரொலித்தது.
புதுவையிலும் அ.தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவர் தனது கருத்தை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளது.
இதற்கிடையே தி.மு.க. சார்பில் கவர்னர் மாளிகை முன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தி.மு.க.வும் அறிவித்துள்ளது.
இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
மக்களை இழிவுபடுத்திவிட்டதாக அரசியல் கட்சி போராட்டம் நடத்த உள்ளதாக அறிந்தேன். சமூக வலைதளத்தில் பதிவிட்டது எனது சொந்த கருத்து அல்ல. மக்களின் பார்வைதான் என்று தெரிவித்திருந்தேன். நான் கூறியது உள்நோக்கம் கொண்டதல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.