துல்லியமான தாக்குதல் நடவடிக்கையில் இஸ்ரேல் ராணுவத்தை போன்றது, இந்திய ராணுவம் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார்.
உலகளவில் குற்ற வழக்குகளில் துப்பு துலக்குவதில் ஸ்காட்லாந்து யார்டு பொலீசார், பிரபலம் ஆனவர்கள். அதே போன்று பகை நாடுகள் மீதும், போராளிகள் மீதும் துல்லியமான தாக்குதல் நடவடிக்கை எடுப்பதில் இஸ்ரேல் ராணுவம் பிரபலமானது.
கடந்த மாதம் 28ஆம் திகதி, எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் முகாமிட்டு, காஸ்மீரிலும், இந்திய நகரங்களிலும் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிக்கொண்டிருந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் துல்லியமான அதிரடி தாக்குதல் நடத்தி, பயங்கரவாதிகளின் 7 முகாம்களை அழித்தது.
இந்த தாக்குதலில் 38 பயங்கரவாதிகள், 2 சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். இதன் மூலம், இந்தியாவை தாக்க திட்டமிட்ட பயங்கரவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டது.
இதுபற்றி, பிரதமர் நரேந்திர மோடி நேற்று இமாச்சல பிரதேச மாநிலத்தில் 3 நீர்மின் திட்டங்களை தொடங்கிவைத்து பேசியபோது குறிப்பிட்டார்.
அவர், ‘இஸ்ரேல் ராணுவத்தை போன்றது இந்திய ராணுவம்’ என பெருமிதத்துடன் கூறினார்.