29.6.2019 சனிக்கிழமை யேர்மனி ஆன்ஸ்பேர்க் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப் போட்டிகளை தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு யேர்மனி எனும் அமைப்பு யேர்மனியின் வடமத்திய மாநிலத்தில் உள்ள தமிழாலய மாணவ மாணவிகளை ஒருங்கிணைத்து நடாத்தியிருந்தது.
ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்ட பின்பு யேர்மனியத் தேசியக் கொடியுடன் தமிழீழத் தேசியக்கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது. பின்பு தமிழ்க்கல்விக் கழகத்தின் கொடி ஏற்றிவைக்கப்பட்டு அகவணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகின. தமிழாலய வீரவீராங்கணைகளினால் ஒலிம்பிக் தீபம் ஏற்றிவைக்கப்பட்டு உறுதிமொழியினை வீரவீராங்கணைகளுடன் பார்வையாளர்களும் எடுத்துக் கொண்டனர்.
பின்பு தமிழாய மாணவ மாணவிகளின் அணிவகுப்புகள் ஆரம்பமாகின இவ் அணிவகுப்பில் நான்கு தமிழாலயங்கள் பங்குபற்றிருந்தன. அதனைத் தொடர்ந்து மெய்வல்லுநர் போட்டிகள் ஆரம்பமாகி மிகச்சிறப்பாக நடைபெற்றது. யேர்மனியின் வடமத்திய மாநிலத்தில் உள்ள பதினைந்து தமிழாலயங்களைச் சேர்ந்த 320 மாணவ மாணவிகள் இப் போட்டிகளில் களமிறங்கினார்கள்.
ஒவ்வொரு தமிழாலயங்களுக்கும் அவர்கள் வெற்றியீட்டிய விளையாட்டுகளின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டது.
285 புள்ளிகளைப் பெற்று எசன் தமிழாலயம் முதலாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.
282 புள்ளிகளைப் பெற்று ஆன்ஸ்பேர்க் தமிழாலயம் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.
226 புள்ளிகளைப் பெற்று போகும் தமிழாலயம் மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.
வெற்றியீட்டிய வீர வீராங்கணைகளுக்கும், தமிழாலயங்களுக்கும் வெற்றிப்பதக்கங்களும் வெற்றிக் கேடயங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.பின்பு தேசியக்கொடிகள் இறக்கிவைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்னும் எழுச்சிப் பாடல் ஒலிக்கவிடப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.