சிரியாவின் நிலைமைக்கு இலங்கை தள்ளப்படும் – விமல்

321 0

சோபா மற்றும் எக்சா உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டால், வெகுவிரைவிலேயே சிரியாவின் நிலைமைக்கு இலங்கை தள்ளப்படும் என எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், இலங்கையை அமெரிக்கா கையகப்படுத்திக் கொள்ளும் திட்டத்தின் ஓர் அங்கமாகவே ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ஸ இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வின்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அமெரிக்காவுடன் இலங்கை செய்துக்கொள்ளவுள்ள எக்ஸா மற்றும் சோபா உடன்படிக்கையினால், எதிர்க்காலத்தில் அமெரிக்காவின் காலணித்துவத்தின் கீழ் இலங்கை வருவதற்கான அபாயம் ஏற்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், இதனை மக்கள் புரிந்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே இரண்டு விதமாக இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு, இந்த அரசாங்கத்தின் காலத்தில் அது கைச்சாத்திடப்பட்டாலும், இலங்கையின் அனைத்து அரசாங்கங்களும் அந்த ஒப்பந்தத்துக்கு ஏற்றவகையிலேயே செயற்பட வேண்டும் என்ற சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அது ஒட்டுமொத்த நாட்டுக்கே ஆபத்தாக அமையும் என்றும் தெரிவித்தார்.

திருகோணமலை துறைமுகத்தை கையகப்படுத்தும் பிரதான நோக்கில் கைச்சாத்திடப்படவுள்ள இந்த ஒப்பந்தங்களினால், அமெரிக்க இராணுவம் எவ்வேளையிலும் இலங்கையில் கால் பதிக்கலாம் என்றும் அவர்கள் இலங்கையின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட மாட்டார்கள் என்றும் குறித்த ஒப்பந்தத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக விமல் மேலும் கூறினார்.

அதேநேரம், இதனால் நாட்டின் விவசாய நிலங்கள், வரலாற்றுச் சின்னங்கள், பௌத்த மதத்திற்கு ஆபத்து ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

அதுமட்டுமன்றி, அமெரிக்காவின் இந்த சூசக செயற்பாட்டின் ஓர் அங்கமாகவே, இலங்கையில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதாகவும் விமல் வீரவன்ஸ சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவை இலங்கைக்குள் நுழைய அனுமதியளிப்போமானால், நாம் நிச்சயமாக சிரியாவின் நிலைமைக்குத் தள்ளப்படுவோம். அவ்வாறான நிலைமையை ஏற்படுத்தி, தமது அரசியல் – பொருளாதாரத்தை பலப்படுத்துவதே அமெரிக்காவின் நோக்கமாக இருக்கிறது.

இதற்கு ஏற்றாற்போல, இலங்கையில் வன்முறைகளைத் தூண்டும் செயற்பாடுகளிலும் அமெரிக்கா ஈடுபடலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

எனவே, இதனை நாட்டு மக்கள் உணர்ந்துக் கொண்டு, இந்த ஒப்பந்தத்தில் அரசாங்கம் கைச்சாத்திடாத வகையில் அலரிமாளிகையை முற்றுகையிட்டு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.