சோபா ஒப்பந்தத்தை நிறைவேற்றி அமெரிக்காவின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும் நோக்கிலே பிரதமர் ரணில் விக்ரசிங்க செயற்படுகின்றார். தேசிய பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் சவால் விடுக்கும் செயற்பாடுகளை தமது அரசியல் தேவைகளுக்காக முன்னெடுப்பதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேற்குலக நாடுகளின் அபிப்ராயங்களை பெறும் நோக்கிலே அரசாங்கம் கடந்த நான்கு வருடகாலமாக செயற்படுகின்றது.நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் சோபா உள்ளிட்ட ஒப்பந்தங்களை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும்.
இந்த ஒப்பந்தத்தினை நிறைவேற்றி அதனூடாக ஆட்சியதிகாரத்தை மீண்டும் கைப்பற்றலாம் என்ற எதிர்பார்ப்புடன் பிரதமர் ரணில் விகரமசிங்க செயற்படுகின்றார். பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பிற்கு மத்தியில் அமெரிக்கா ஒப்பந்தங்கள் ஒருபோதும் நிறைவேற்ற இடமளிக்க முடியாது.
மரண தண்டனை தற்போது அரசியல் பேசுபொருளாக காணப்படுகின்றது. இதன் காரணமாக ஏப்ரல் 21 தின குண்டுத்தாக்குதல் மறைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் தற்போதும் நீடிக்கும் கருத்து வேற்றுமையே அனைத்து பிரச்சினைக்கும் பிரதான காரணம். மரண தண்டனை வழங்குவது ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைக்கு முரணானது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளது பொருத்தமற்றது.
தற்போதைய அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் அனைத்திற்கும் தேர்தலின் ஊடாகவே தீர்வு கிடைக்கப் பெறும்.
பிரதமர் மற்றும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மீண்டும் அமைய பெற்றால் மரண தண்டணையினை பொது மக்கள் தமக்கு தாமே வழங்கிக் கொள்வார்கள். என இதன் போது தெரிவித்தார்.