முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் பெண் மருத்துவ நிபுணர்கள் நேற்று முன்தினம் இரண்டாவது நாளாக பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர்.
உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு 27 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதல்வரின் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து பல்வேறு சிகிச்சைகளுக்கான மருத்துவ நிபுணர் குழு கண்காணித்து வருகிறது.
லண்டன் மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பீலே, எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிநாயக் ஆகியோர் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஊட்டச்சத்து, பிசியோதெரபி சிகிச்சைகளும் தொடர்ந்து அளிக்கப்படுகின்றன.
லண்டன் மருத்துவர், எய்ம்ஸ் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையைச் சேர்ந்த 2 பெண் மருத்துவ நிபுணர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்போலோவுக்கு வந்து முதல்வருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர்.
முதல்வரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அப்போலோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.