ஜனாதிபதியின் எச்சரிக்கையையும் மீறி முன்னாள் இராணுவத் தளபதிக்கு ஆணைக்குழு அழைப்பு

299 0

commision-300x189பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக் குழுவின் எதிரில் முன்னிலையாகுமாறு முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை இவ்வாறு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக, இராணுவ வங்கிக் கணக்கு ஒன்றில் வைப்புச் செய்யப்பட்டுள்ள 50 மில்லியன் ரூபா அரச நிதி துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

குருணாகல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டிடப் பொருட்களை வழங்குவதற்கு எனத் தெரிவித்து குறித்த பணம் இராணுவ கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்தினால் இந்தப் பணம், இராணுவ வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் செயலாளராகவும் தொலைதொடர்பு ஆணைக்குழுவின் தலைவராகவும் கடமையாற்றிய லலித் வீரதுங்க மற்றும் பணிப்பாளர் நாயகம் அனுச பெல்பிட்ட ஆகியோர் நிதியை வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பிலேயே முன்னாள் கடற்படைத் தளபதியிடம் நாளை விசாரணை நடத்தப்பட உள்ளது.

இதேவேளை, முன்னாள் படையதிகாரிகள் நீதிமன்றங்கள் ஆணைக்குழுக்கள் முன்னிலையில் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கு ஜனாதிபதி அண்மையில் கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.