இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்க ஆபரணங்களை கடத்த முற்பட்ட சிங்கப்பூர் பிரஜைகள் இருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் வருகை தந்த எஸ்.கியு.468 என்னும் விமான சேவையூடாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த சிங்கப்பூரை சேர்ந்த 55 , 45 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் சிங்கப்பூரின் பணப்பரிமாற்ற நிறுவனமொன்றின் உரிமையாளர்கள் எனவும் பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் இவ்வருடத்தில் மாத்திரம் 6 தடவைகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மிகவும் சூட்சுமமான முறையில் ஆடைக்குள் மறைத்து ஆபரணங்களை கடத்த முற்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 5 கிலோ கிராமிற்கும் அதிக நிறையுடைய இரண்டு கோடி 60 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க மாலைகள் மற்றும் பென்டன்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.