நடைமுறையில் இருக்கும் மொழிச் சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்த தவறிவரும் தற்போதைய அரசாங்கம் எவ்வாறு தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அதிகார பரவலாக்கலை வழங்கப்போகின்றது என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.
மொழிப் பிரச்சனை என்பது ஒரு தேசிய பிரச்சனை என்பதுடன் இதுவே இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான ஒரு முன்னோடி எனவும் தெரிவித்துள்ளதுடன், தன்னை ஒரு காட்சிக்காக வைத்திருக்கும் அமைச்சராக இருப்பதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
அரச மொழிக் கொள்கை தொடர்பான நியதிச் சட்டத் தலைவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் பிரதமத அதிதியாகக் கலந்துகொண்ட தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழி அமைச்சர் மனோ கணேசன் உரையாற்றுகையில், கடந்த மகிந்த ராஜபக்ஷ காலத்தில் அரண்மனை ஆட்சி நடைபெற்றதாகவும், அதன்போது நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவை பூனைக்குட்டிகளாகச் செயற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நாட்டில் ஆட்சிசெய்தபோது, பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவி வகித்தபோது சந்திரிக்கா முக்கிய நான்கு அமைச்சுக்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆட்சியைக் கைப்பற்றினார். தற்போது நாட்டில் மைத்திரிபால சிறிசேனவும், ரணிலும் இல்லாதநிலையில், நாட்டின் ஆட்சியைக் கைப்பிற்றிவிடலாம் எனச் சிலர் கனவு காண்பதாகவும் தெரிவித்தார்.
அவ்வாறு நடைபெறாது எனத் தெரிவித்த அவர், மைத்திரியும் ரணிலும் இணைந்து தமிழ், முஸ்லிம் மக்களுக்கு உரிய இடத்தினை வழங்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.