புகையிரத ஊழியர்களின் பிச்சினையை இரண்டுவாரங்களில் தீர்ப்பேன். அவர்கள் சேவைக்குவராவடிட்டால் ஓய்வூதியர்களை நியமித்து சேவையை தொடர நடவடிக்கை எடுப்பேன். இல்லாவிட்டால் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவந்தேனும் ரயில் சேவைகள் இடம்பெற நடவடிக்கை எடுப்பேன். அத்துடன் மக்களுக்கு அசெளகரியம் ஏற்படும் வகையில் செயற்பட்டால் கடும் தீர்மானம் எடுக்கநேரிடும் என போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பாராளுமன்றில் தெரிவித்தார்.
மேலும் ரயில்வே ஊழியர்கள் சிலரது சம்பளத்தில் குறைபாடுகள் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம் . எனினும் சிலர் 2 லட்சம் 3 லட்சம் என அதிகரித்த சம்பளம் பெற்று வருகின்றனர். இது தொடர்பில் ஆராய்ந்து முறைமை ஒன்றை ஏற்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும் .அதற்காகவே நாம் கால அவகாசம் கோரியிருந்தோம். எமது கோரிக்கைக்கு செவிமடுக்காமல் ரயில்வே ஊழியர்கள் தொடர்ந்தும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்களானால் அதை எம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
ரயில்வே ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்கும் நிலையில், 5 லட்சத்து 18 ஆயிரத்து 720 அரசு ஊழியர்களின் சம்பளங்களிலும் முரண்பாடு ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் அரசாங்கம் பெரும் நெருக்கடி ஒன்றை எதிர்கொள்ள நேரிடும். அதனைக் கருத்திற்கொண்டே ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளார். அதனூடாக ஆராயப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் அதற்கான முறைமை ஒன்றை ஏற்படுத்தி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எம்மால் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.