பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது!

537 0

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. இன்று நடக்கும் முதல் நாள் கூட்டத்தில் மறைந்த எம்.எல்.ஏ.க் களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி 8-ந் தேதி தொடங்கியது. அன்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் விவாதம் நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு பிப்ரவரி 14-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்து பேசினார்.

அனைத்து அலுவல்களும் முடிந்ததைத் தொடர்ந்து, சட்டசபை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடப்படாமல் பிப்ரவரி 14-ந் தேதி தள்ளி வைக்கப்பட்டது.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதாக இருந்ததால், மானியக் கோரிக்கைகள் தொடர்பான நிகழ்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.
இந்தநிலையில் தமிழக சட்டசபையை கூட்டுவதற்கான உத்தரவை கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடந்த மே 30-ந் தேதி பிறப்பித்தர்.
இன்று கூடுகிறது
அதன்படி இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூடுகிறது. முதல் நாள் கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள் கனகராஜ் (சூலூர்), ராதாமணி (விக்கிரவாண்டி) ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
முன்னதாக, மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மா.சுந்தரதாஸ், கே.பஞ்சவர்ணம், ஏ.சுப்பிரமணியம், ந.செல்வராஜ், ஏ.கே.சி.சுந்தரவேல், மு.ராமநாதன், பொ.முனுசாமி, சா.சிவசுப்பிரமணியன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும்.
2 எம்.எல்.ஏ.க்கள் மறைந்துவிட்டதால், சட்டசபையின் இன்றைய நிகழ்ச்சி, இரங்கல் தீர்மானத்தோடு நிறுத்தி வைக்கப்படும்.
நம்பிக்கை இல்லா தீர்மானம்
சபாநாயகர் ப.தனபால் மீது தி.மு.க. கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம், ஜூலை 1-ந் தேதியன்று சட்டசபையில் எடுத்துக்கொள்ளப்படும். சபையை அப்போது துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நடத்துவார்.
இந்த தீர்மானத்தை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களை எழுந்து நிற்க அவர் உத்தரவிடுவார். குறைந்தபட்சம் 35 எம்.எல்.ஏ.க்கள் எழுந்து நின்றால், அந்த தீர்மானம் அவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
தி.மு.க. வற்புறுத்தினால், எண்ணிக் கணிக்கும் முறையில் (டிவிஷன்) ஓட்டெடுப்பு நடத்தப்படும். தி.மு.க. கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றதா, தோல்வி அடைந்ததா என்பதை ஓட்டு எண்ணிக்கையின் அடிப்படையில் துணை சபாநாயகர் அறிவிப்பார்.
அவையில் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும் அன்றோ (ஜூலை 1-ந் தேதி) அல்லது அன்றிலிருந்து 7 நாட்களுக்குள்ளோ இந்த தீர்மானத்தை அவையில் ஓட்டெடுப்புக்கு கொண்டு வர வேண்டும்.
கட்சிகளின் பலம்
தற்போதைய சூழ்நிலையில் நாங்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன. சட்டசபையில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 232-ஆக உள்ளது. இதில் அ.தி.மு.க.வின் பலம் 122 (சபாநாயகர் நீங்கலாக) ஆகவும், தி.மு.க. கூட்டணியின் பலம் 109 ஆகவும் உள்ளது.
எழுப்பும் பிரச்சினைகள்
நாடாளுமன்ற தேர்தலில் பெரிய அளவிலான வெற்றியைப் பெற்றுள்ளதால் புதிய தெம்புடன் தி.மு.க. செயல்படும். எனவே இந்தி திணிப்பு, தண்ணீர் தட்டுப்பாடு, வறட்சி, உள்ளாட்சித் தேர்தல் ஆகிய பிரச்சினைகள் குறித்து கடுமையான விவாதங்களை தி.மு.க. முன்வைக்கும். எனவே சட்டசபையின் இந்த கூட்டத் தொடர் பரபரப்பாக இருக்கும்.
இந்த கூட்டத் தொடரில் அரசுத் துறைகளின் ஒவ்வொரு துறைக்கும் நிதி அளிப்பது தொடர்பான விவாதத்தில் எம்.எல்.ஏ.க்கள் விவாதிப்பார்கள். அவர்களுக்கு சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர்கள் பதிலளிப்பார்கள். அப்போது துறைகளுக்கான புதிய அறிவிப்புகளை அவர் கள் வெளியிடுவார்கள்.
இந்த கூட்டத் தொடர் ஜூலை 30-ந் தேதிவரை 23 நாட்கள் நடைபெறும்.