தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ்மக்களை ஏமாற்றி ஒற்றையாட்சி தீர்வுக்கு ஆதரவளிக்கும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளது என தெரிவித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மக்கள் பலம் மட்டும் தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டையும் சர்வதேசத்தின் நிலைப்பாட்டையும் மாற்றியமைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தற்போது புதிய அரசியலமைப்புக்கான நகல் வெளியிடப்படவுள்ள நிலையில், எதிர்வரும் இரண்டு மாதங்களில் முழுமையான அரசியலமைப்பு வெளியிடப்படவுள்ளது என அரசு அறிவித்துள்ளது.
அந்த அரயலமைப்பு ஒற்றையாட்சியின் கீழ் அமைவதோடு பௌத்தத்திற்கும் முன்னரிமை அளிக்கப்படவுள்ளது. ஆனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவிக்காமல் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிவிட்டு அதற்கு தமிழர்களும் ஆதரவு அளித்தார்கள் என்று தமிழ்த்தேசிய கூறும் அதன் பின்னர் அரசு எம்மை ஏமாற்றி விட்டது என்று நாடகமாடும். இந்த நிலை தான் வரப்போகின்றது.
இந்த அரசிற்கு பலதடைவைகள் நிபந்தனையற்ற ஆதரவை முக்கியமான தருணங்களில் வழங்கி வந்துள்ளது. அந்த தருணங்களை தவறவிட்டு தற்போது பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் முன்னரை விட ஆபத்தானது என்று சுமந்திரன் இப்போது கூறி வருகின்றார். பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவருவதற்கு கூட்டமைப்பும் ஒரு காரணம் தான், அரசுக்கு ஆதரவு வழங்கும் போது பேரம் பேசியிருந்தால்,
இந்த சட்டத்தை கொண்டுவரமலும், இன்னும் பலவிடயங்களை சாதித்திருக்க முடியும். எழுக தமிழின் பின்னரான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் மாற்றம் காண தொடங்கியுள்ளது. இந்த மாற்றம் மக்களின் எழுச்சியூடாக தான் நிகழ்ந்துள்ளது. கூட்டமைப்பு அஞ்ச ஆரம்பித்துள்ளது. எனினும் இரு மாதகால அவகாசம் கோரும் கூட்டமைப்பு ஒற்றையாட்சி தீர்வை தமிழ் மக்கள் ஏற்க வைக்கும் இரகசிய திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
இப்போது எதிர்க்க வேண்டாம் என கூறும் கூட்டமைப்பு அரசியலமைப்பு வந்தவுடன் அரசு எம்மை ஏமாற்றி விட்டது என்ற நாடகத்தை அரங்கேற்ற போகின்றது. ஆகவே அதற்கிடையில் மக்கள் விழிப்படைய வேண்டும். மீண்டும் ஒரு எழுச்சிக்கு தயாராக வேண்டும். மக்கள் போராட்டமே அனைத்தையும் மாற்றியமைக்கும் என்றார் அவர்.