ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஜனாதிபதியை அழைத்தால், அவர் நிச்சயமாக முன்னிலையாக வேண்டும் என்று தெரிவுக்குழு உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
மேலும், தெரிவுக்குழுவில் முன்னிலையாக ஜனாதிபதி தவறுவாறாயின், அவரது பதவிக்காலம் நிறைவடைந்ததும் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.
மேலும் தெரிவித்த அவர், “ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் தெரிவுக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரை ஆழைப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. தெரிவுக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்து தெரிவுக்குழுவில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் அதனை தெளிவுபடுத்துவதற்கு ஜனாதிபதிக்கும் ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டுமென எண்ணுகிறேன்.
அதற்கமைய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக ஜனாதிபதியை அழைத்தால், அவர் நிச்சயமாக முன்னிலையாக வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.