பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்விற்கான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 730 ரூபா வழங்க முதலாளிமார் சம்மேளனமும் தொழிற்சங்கத்தினரும் இணங்கி, இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
கடந்த ஒன்றரை வருடங்களாக இழுபறி நிலையில் காணப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் இன்றைய தினம் கைச்சாத்திடப்பட்டது.
கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி இந்தக் கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவிருந்த நிலையில் காலாவதியாகியிருந்தது.
இந்நிலையில் தோட்டக் கம்பனிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தோட்டத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே இன்று கொழும்பில் வைத்து கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.