பிரான்சில் லாக்கூர்னொவ் தமிழ்ச்சோலையின் கல்வியாண்டு நிறைவு நாள்!

693 0

பிரான்சில் லாக்கூர்னொவ் தமிழ்ச்சோலையில் இன்று (23.06.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் 2018/2019 கல்வியாண்டின் நிறைவு நாள் சிறப்பாக இடம்பெற்றது.

லாக்கூர்னொவ் தமிழ்ச் சங்கத் தலைவர் திருவாளர் புவனேஸ்வரன்,நிர்வாகி திருவாட்டி நேசராசா சிவகுமாரி தலைமையில் அகவணக்கம் செலுத்தப்பட்டு, தமிழ்ச்சோலைக் கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இந் நிகழ்வில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு சார்பில் அதன் உறுப்பினரும்,மனித நேயச் செயற்பாட்டுப் பொறுப்பாளருமான திருவாளர் சுரேஸ் அவர்களும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் சார்பில் அதன் செயற்பாட்டாளர் நாகஜோதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகளாக வாய்ப்பாட்டு,பிடில்(வயலின்)இசை,சுரத்தட்டு ,நடனம் என்பனவும்,திருக்குறள் திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களின் நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றிருந்தன.

நிகழ்வில் கலந்து உரையாற்றிய திருவாளர் சுரேஸ் அவர்கள் தெரிவிக்கையில், சங்கத்தின் செயற்பாடுகள் மன நிறைவைத் தருவதாகவும் மேலும் தொடர்ந்து அவ்வாறு செயற்பட வேண்டும் எனவும், சிறந்த ஆசிரியர்கள் பணி செய்கிறார்கள்,அவர்கள் தமிழ் மொழி அறிவோடு இயற்கையை எம் குழந்தைகள் நேசிக்கவும் அதனோடு ஒன்றி வாழப் பழக்கவேண்டும் என்ற கோரிக்கையினையும் அவர் முன் வைத்தார்.

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் தேர்வுப் பொறுப்பாளரும்,லாக்கூர்னொவ் தமிழ்ச்சோலை ஆசிரியருமான திருவாளர் அகிலன் அவர்களும்,ஆசிரியை திருவாட்டி சாந்தலட்சுமி, ஆசிரியை திருவாட்டி கிரிஜா அவர்களும் உரையாற்றினார்கள். பெற்றார் சார்பாக உரையாற்றிய திருவாட்டி சிவகுமாரி வளர்தமிழ் 12 படித்து முடித்த மாணவர்கள் சார்பில் ஆசிரியர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார்.