கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விவாகரத்தில் தமிழர்களின் உரிமைகளை தட்டிப்பறிக்க முஸ்லிம்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை, இந்த விடயத்தில் அனாவசிய தலையீடுகள் செய்யவேண்டாம் என முஸ்லிம் தலைமைகளுக்கு காத்திரமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியதாக அதன் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் விடயங்களை கூறினார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் முஸ்லிம் தலைமைகள் அனாவசியமாக தலையிட்டு குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாகவே நாம் கருதுகின்றோம். கல்முனை வடக்கு நிலத்தொடர்பு கொண்ட பிரதேசம். அதுமட்டும் அல்ல இது தமிழர்கள் வாழும் பகுதி. இதில் புதிதாக எல்லை நிர்ணயம் ஒன்றினை செய்யவேண்டிய எந்தவித தேவையும் இல்லை. கல்முனை தெற்கு பிரதேச செயலகம் நிலத்தொடர்பு இல்லாததது. இதில் தான் எல்லை நிர்ணயங்கள் செய்தாகவேண்டும். இது அவர்களின் பிரச்சினை, இதனை தீர்க்க தெரிவுக்குழு அமைத்துக்கொள்வதும் நடவடிக்கை எடுப்பதும் அவர்களின் பிரச்சினை ஆனால் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் அனாவசியமாக முஸ்லிம் பிரதிநிதிகள் தலையிட்டு தமிழர்களின் பிரச்சினைகளை குழப்புவது கண்டிக்கத்தக்கது.
கல்முனை தெற்கு பிரதேச செயலகத்திற்கான உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு முஸ்லிம்கள் போராடுவதில் நியாயம் இருக்கிறது ஆனால் தமிழர்களுக்கு கொடுக்க வேண்டாம் என கூறுவதற்கு அவர்களு எந்த அதிகாரமும் இல்லை. இந்த விடயத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் மத்தியில் நாம் கண்டிப்பாக தெரிவித்து வருகின்றோம்.
எவ்வாறு இருப்பினும் இந்த பிரசினை ஜூன் மாதத்தில் தீர்க்கப்படும் என அரசாங்கம் ஏற்கனவே எமக்கு வாக்குறுதி கொடுத்தது. அதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அடுத்த வாரத்தில் இருந்து கணக்காய்வாளர் கல்முனை வடக்கு செயலகத்தில் தனது கடமைகளை ஆரம்பிப்பார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.