மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் குறித்து விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்திப் பணிகளை சுட்டிக்காட்டி அதிகளவான விமர்சனங்களை வெளியிடுவதால் மலையகத்தின் மூத்த தொழிற்சங்கம் ஒன்றுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
கொட்டகலை யதன்சைட் தமிழ் மகா வித்தியாலயத்தின் இரண்டு மாடி வகுப்பறைக் கட்டடம் அமைச்சர் இராதாகிருஸ்ணனால் திறந்து வைக்கப்பட்டது. இந்த கட்டடம், கல்வி அமைச்சின் 10 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது.
பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்புவிழாவில், நுவரெலியா கல்வி வலயத்தின் கோட்டம் 3இற்கான கல்வி பணிப்பாளர் வடிவேல், மலையக மக்கள் முன்னணியின் நிதி செயலாளர் புஸ்பா விஷ்வநாதன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மயில்வாகனம் உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
கட்டடத்தை திறந்துவைத்து உரையாற்றிய அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், “கடந்த காலங்களில் இராஜாங்க கல்வி அமைச்சராக இருந்தபோது என்ன செய்தோம் என மூத்த தொழிற்சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் விமர்சித்துள்ளார்.
குறித்த காலத்தில் இந்நாட்டில் நூற்றுக்கு எழுபது வீத பாடசாலைகளை திறந்து வைத்தது எனது தலைமையில் தான் என்பதை தெரிவிக்கும் அதேவேளை, மத்திய மாகாணத்தில் ஆசிரியர்கள் நியமனம், கல்வித் துறைசார் அதிகாரிகளின் நியமனம் என பல்வேறு வேலைத் திட்டங்களை நான் மேற்கொண்டுள்ளேன்.
ஒருவர் செய்யும் அபிவிருத்தியை விமர்சிப்பதைச் தவிர்த்துக் கொள்ளவேண்டும். செய்யும் சேவைகளும், முன்னெடுக்கும் அபிவிருத்திகளும் மக்கள் நலன் கருதியே முன்னெடுக்கப்படுகின்றன” என்று அவர் தெரிவித்தார்.