தற்போதைய சூழலில் இந்த அரசாங்கத்திலும் தமிழ் மக்களுக்கான தீர்வு சாத்தியம் இல்லை என தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கல்முனை விவகாரமும் காலங்காலமாக வந்த அரசாங்கங்கள் இழுத்தடிப்புச் செய்துவருவதாகவும், அதே நிலையில்தான் இந்த அரசாங்கமும் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் இணைந்த ஆட்சி நியாயமான தீர்வைப் பெற்றுத்தரும் என்ற அடிப்படையில் தமிழ் மக்கள் பெரும் ஆதரவை அவர்களுக்கு வழங்கினர் என்று குறிப்பிட்ட அவர், இன்றைய சூழலில் தீர்வுக்கான சாத்தியம் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற தமிழீழ விடுதலைக் கழகத்தின் பேராளர் மாநாட்டின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த பிரேமதாச காலத்தில் இருந்து 30 வருடங்களாக கல்முனை தமிழ் பிரதேசசபை உபசெயலகமாக இயங்கினாலும் கூட அதனை தரமுயர்த்துவதற்கு பல்வேறு தடைகள் போடப்பட்டுக்கொண்டே வந்துள்ளன.
அங்கே இருக்கின்ற முஸ்லிம் சமூகத்தினருக்கு இந்த செயலகம் எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. எனினும் அதனை ஒரு பிரச்சினையாக எண்ணி தடைபோடுகிறார்கள். அத்துடன் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் காலதாமதத்தை ஏற்படுத்தின.
தற்போதைய அரசாங்கமும் நாம் பூரண ஆதரவு கொடுத்தும் கூட அதனை செயற்படுத்துவதில் கால தாமதத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றது.
இவ்விடயத்தில் போராடுகின்ற ஏனைய கட்சிகளுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான பூரண ஆதரவை நாங்களும் வழங்குவோம். இதனை நாங்கள் ஒரு தீர்மானமாக எடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.