சிறீலங்காவுக்கு 2623கோடி ரூபா பெறுமதியான இராணுவத் தளபாடங்களுக்கான உதவியையும், ஒரு ஆழ்கடல் ரோந்துக் கப்பலையும் வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 13ஆம் திகதி சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற சிறீலங்கா – சீன பாதுகாப்புக் கலந்துரையாடலின்போதே இதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
சீனாவின் மத்திய இராணுவ ஆணையத்தின் கூட்டு அதிகாரிகள் திணைக்களத்தின் பிரதித் தலைவர் அட்மிரல் சன் ஜியாங்கூ தலைமையிலான சீன பாதுகாப்பு அதிகாரிகள் குழுவும், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தலைமையிலான சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் குழுவும் இந்த பாதுகாப்புக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தன.
இந்தக் கலந்துரையாடலில், உயர் மட்டப் பரிமாற்றங்கள், இராணுவ உதவிகள், பாதுகாப்புத்துறைசார் சிந்தனைக் குழாம்களின் ஒன்றுகூடல், பயிற்சி வகுப்புக்கள், புலனாய்வு ஒத்துழைப்பு, கூட்டு இராணுவப் பயிற்சிகள், பாதுகாப்புக் கருத்தரங்குகளில் பங்கேற்றல், பயிற்சிப் பட்டறைகள் உள்ளிட்ட அனைத்து விதமான பாதுகாப்பு ஒததுழைப்புத் தொடர்பாகவும் இருதரப்பும் மீளாய்வு செய்தன.
இந்தப் பாதுகாப்புக் கருத்தரங்கின் முடிவில், சிறீலங்காவுக்கு 2623ரூபா கோடி இராணுவத் தளபாட உதவிகளும், ஒரு ஆழ்கடல் ரோந்துக்கப்பலும் வழங்குவதற்குமான இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்தத் சிறீலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டிருந்தபோதிலும், சீனா குறித்த உதவி தொடர்பாக எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.