புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனையைக் கையிலெடுத்தே அனைத்துக் கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்கின்றன எனவும் பிரச்சனையைத் தீர்க்கவல்ல எனவும் நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள், இனப்பிரச்சனைக்கு சிறந்ததொரு தீர்வை வழங்காததனாலேயே 30 வருட கால கொடிய யுத்தத்திற்குத் தள்ளப்பட்டோம்.
கண்டி விகாரமாதேவி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், “நம்மில் தவறு எங்கு இடம்பெற்றுள்ளது என்பதை அறிந்து அவற்றை சரிசெய்து முன்நோக்கப் பயணிப்பதற்கான தருணம் வந்துள்ளது. இனங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையை சரிவர முகாமைசெய்யாமையே நாங்கள் இழைத்த பெருந்தவறாகும். மலேசியாவில் அந்நாட்டுப் பிரஜைகள் 49 வீதமானவர்களே உள்ளனர். 51 வீதமானவர்கள் சீன நாட்டவர்கள். ஆனாலும் அந்த நாட்டில் பாரியதொரு சிவில் யுத்தம் ஏற்பட்டிருந்தது. அதன் பின்னர் இனங்களுக்கு இடையிலான பிரச்சினை தீர்க்கப்பட்டு, அனைத்து இனங்களுக்கும் சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கிக்கொடுக்கப்பட்டது. புதிய அரசியலமைப்பொன்றும் உருவாக்கப்பட்டது.
சிங்கப்பூரும் அப்படித்தான். சுதந்திரம் கிடைத்து ஓரிரு வருடங்கள் கழிந்தபோது இனங்களுக்கு இடையிலான பிரச்சினை தீர்க்கப்பட்டது. துரதிஷ்டவசமாக நமது நாட்டில் அது தீர்க்கப்படவில்லை. இனங்களுக்கு இடையிலான பிரச்சினையை பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற அனைத்து கட்சிகளும் முயன்ற காரணத்தினால்தான் 30 வருடகால யுத்தத்திற்கு முகங்கொடுக்கவேண்டியதாயிற்று.
சுதந்திரம் கிடைத்தபோது அப்போதிருந்த தலைவர்கள் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தால் இந்த நாடு இவ்வாறான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்காது. 1948ஆம் ஆண்டில் ஒருசதமேனும் கடனாளியாக இல்லாதிருந்த எமது நாடு மொத்த தேசிய வருமானத்தைக் கொண்டாகிலும் கடனை செலுத்த முடியாதளவிற்கு எமது பொருளாதாரம் பின்னடைவை எதிர்கொண்டுள்ளது. வருமானத்தை கடனுக்குச் செலுத்தினால் ஒருசதமேனும் எஞ்சியிருக்காது. எமக்கு என்ன நடந்தது என்பதை சிந்திக்க வேண்டும்.
எமக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் தீர்க்கப்பட முடியாத பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சிப்பதாக கடந்த தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூறினார்கள். எனவு ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் 1952ஆம் ஆண்டில் சிங்கப்பூர், மலேசியாவில் இருந்ததைப் போன்று அனைத்து இனங்களுக்கும் சுதந்திரமாக வாழக்கூடிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவோம். கட்சிகளுக்கு இடையிலுள்ள இனவாதம் தகர்த்தெறியப்பட்டு ஒன்று சேர்ந்துள்ளன.
நமது நாடு சுதந்திரம் அடைந்து 67 வருடங்கள் ஆகின்ற போதிலும் ஸ்ரீலங்கா பிரஜை என்ற அடையாளத்தை உறுதிசெய்ய முடியாதுபோயுள்ளது. இந்தியாவில் 25 மாநிலங்கள் உள்ளன. ஒரு மாநிலத்தில் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் வெவ்வேறு மொழிகள் உள்ளன. ஆனாலும் நாட்டை ஒன்றிணைத்து ஒரு நபர் வெளியில் சென்று பெருமையாகக் கூறும் வண்ணம் அந்த நாட்டில் சுதந்திரம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது”