வறட்சியை சமாளிக்க தமிழகத்தில் சிறப்பு திட்டத்தை அமல்படுத்த ரூ.1000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என டெல்லியில் மத்திய நிதி மந்திரிகள் கூட்டத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு அனைத்து மாநில நிதி மந்திரிகள் கூட்டம் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. மத்திய நிதி மந்திரியாக நிர்மலா சீத்தாராமன் பொறுப்பேற்ற பின்னர், மாநில நிதி மந்திரிகளுடன் நடைபெற்ற முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.
நிதி மந்திரிகள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
பொய்த்துப்போன பருவமழை, நதிநீர்ப் பங்கீட்டில் உள்ள பிரச்சனையால் தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வறட்சி, குடிநீர் பிரச்சனையை சமாளிக்க தமிழகத்துக்கு சிறப்பு நிதியாக ரூ.1,000 கோடி ஒதுக்க வேண்டும். மகாராஷ்டிராவிற்கு வழங்கப்பட்டது போல சிறப்பு நிதியை தமிழகத்திற்கு அளிக்க வேண்டும்.
கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்துக்காக வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். கிருஷ்ணா-கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த மத்திய அரசு முன் வர வேண்டும்.
கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கூடுதலாக 2 லட்சம் வீடுகள் கட்ட ரூ.6,000 கோடி ஒதுக்க வேண்டும். பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் நிதி ரூ.1.20 லட்சம் கோடியிலிருந்து ரூ.3 லட்சம் கோடியாக அதிகரிக்க வேண்டும். ஆனைகட்டி குடிநீர் திட்டத்திற்கு தேவையான ரூ.17 ஆயிரத்து 600 கோடி நிதியை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.