கலஹா, தெல்தோட்டை லிட்டில்வெளி தோட்ட மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கான இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கு மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை நேற்று முன்தினம் (19) இணக்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க தொழில் முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரிெயல்லவின் ஆலோசனையின்பேரில், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் வேலுகுமார் எம்.பி. தலைமையில் கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இவ்வாறு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் குறித்த சபையின் சார்பில் அதன் தலைவரும், தொழிலாளர்கள் சார்பில் தோட்டக்கமிட்டி தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில் மேற்படி கலந்துரையாடல் குறித்து கருத்து வெளியிட்ட வேலுகுமார் எம்.பி. கூறியதாவது,
தெல்தோட்டை லிட்டில்வெளி, கிரேட் தோட்டங்களிலுள்ள இடங்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வெளியாருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டு வருகின்றன. காடாக காட்சிதந்த மண்ணை வளமாக்கிய எங்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு அங்குலம் நிலத்தை வழங்குவதற்குகூட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மக்கள் லயன் அறைகளுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டும் என்பதுதான் முதலாளி வர்க்கத்தின் ஏகோபித்த எதிர்பார்ப்பாக இருந்துள்ளது.
இந்நிலையில் லிட்டில்வெளி தோட்டத்தில் வாழும் 160 குடும்பங்களுக்கு வீடுகளை அமைப்பதற்கு நிலத்தை கோரியிருந்தோம். ஆனால், வழங்கப்படவில்லை. திட்டமிட்ட அடிப்படையில் இழுத்தடிப்பு செய்யப்பட்டது. நாமும் பின்வாங்கவில்லை. தொடர்ந்தும் போராடினோம். அதன்பலனாகவே இன்று நில ஒதுக்கீட்டை வழங்குவதற்கு பெருந்தோட்ட அபிவிருத்தி சபையின் தலைவரால் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் கிரேட்வெளி தோட்ட மக்களுக்கும் விரைவில் வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.