உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த உண்மைகளை மறைக்க முயற்சி- கர்தினால் மல்கம் ரஞ்சித்

356 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை மறைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார்.

பரிசுத்த பாப்பரசரைசந்திப்பதற்கு முன்னர் ரோமில் செய்தியாளர்களை சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த தனது உணர்வுகளை கண்ணீருடன் அவர் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கணவர் ஒருவர் தனது மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் இழந்துள்ளார், நான் அவரை சந்திக்கசென்றவேளை தான் வேலையிலிருந்து வீடு திரும்பியவுடன் பிள்ளைகள் ஓடிவருவதை அவர் நினைவுகூர்ந்தார் இன்று அந்த வீடு வெறுமையாக உள்ளது என மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தாக்குதல்கள் இடம்பெறவுள்ளன என ஏப்பிரல் நான்காம் திகதி இந்திய புலனாய்வுபிரிவினர் எச்சரித்துள்ளனர் அதற்கு பின்னர் 3 தடவைகள் அவர்கள் இவ்வாறான எச்சரிக்கையை விடுத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு தினத்தன்று காலை 6.45 மணிக்கும் இந்தியாவிலிருந்து குண்டுவெடிப்பு இடம்பெறலாம் என்ற தொலைபேசி எச்சரிக்கை இலங்கைக்கு தெரிவிக்கப்பட்டது எனவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால் இதனை எவரும் தீவிரமாக எடுக்கவில்லை, என தெரிவித்துள்ள அவர் இந்த தாக்குதலை தடுத்திருக்கலாம், எனக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்தால் அனைத்து தேவாலயங்களையும் மூடிவிடுமாறும் மக்களை வீடுகளிற்கு செல்லுமாறும் கேட்டிருப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொருவரும் ஏனையவர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்த முயல்கின்றனர் உண்மையை மறைப்பதற்கான முயற்சிகளும் இடம்பெறுகின்றன என கர்தினால் மல்கம் ரஞ்சி;த் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் ஜனாதிபதி கூட குற்றவாளியா என்ற சந்தேகம் காணப்படுகின்றது இதன் காரணமாக அவர்கள் அதனை மறுக்கின்றனர்எனவும் தெரிவித்துள்ள அரசாங்க தரப்பும் பாதுகாப்பு தரப்பும் இந்த விடயம் குறித்து உண்மையான ஆர்வத்தை கொண்டிருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.