மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் விசாரணைகளுக்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில், பொய் சாட்சி கூறியமை தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்காக சி.ஐ.டி.முன் ஆஜராகுமாறு அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அவரது மனைவி மெலரின் ஹிரந்தி கருணாநாயக்கவுக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
எதிர்வரும் ஜூலை 7 ஆம் திகதி குற்றப் புலனயவுப் பிரிவின் நிதிக் குற்ற விசாரணை அறை இலக்கம் 2 முன்னிலையில் ஆஜராகி வாக்கு மூலங்களை வழங்குமாறு இதன்போது கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் அவரது மனைவிக்கும் உத்தரவிட்டார்.
இதனைவிட எதிர்வரும் 26 ஆம் திகதி சி.ஐ.டி. முன் ஆஜராகி வாக்கு மூலம் வழங்குமாறு அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனெலா கருணாநாயக்கவுக்கும் நீதிவான் உத்தரவிட்டார்.
அத்துடன் குளோபல் ட்ரான்ஸ்பொரெஷன் நிறுவனத்துடன் தொடர்புடைய அவசியமான ஆவணங்களை எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கவும் இதன்போது ஒனெலா கருணாநாயக்கவுக்கு நீதிவான் உத்தரவிட்டார்.