ஹங்வெல்ல – பனாகொட வீதியில் முச்சக்கர வண்டி லொறியுடன் மோதுண்டதில் சிறுமி உட்பட பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்றுபேர் கவலைக்கிடமான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் , நான்கு பேர் ஹோமாகம வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.
ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாகொட வீதியின் திகலவத்த சந்திக்கருகில் இன்று வியாழக்கிழமை முச்சக்கர வண்டியொன்று எதிர் திசையில் வந்த லொறியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
பனாகொடையிலிருந்து எம்புல்கம நோக்கி சென்ற முச்சக்கரவண்டி எதிர் திசையில் வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதுண்டுள்ளது. இதன்போது முச்சக்கர வண்டியில் சாரதி உட்பட 8 பேர் பயணித்துள்ளதுடன், அனைவரும் காயமடைந்த நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிகிச்சை பலனின்றி பெண்ணொருவரும் சிறுமியும் உயிரிழந்துள்ளதுடன், மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் மாத்தறையை சேர்ந்த 7 வயதுடைய ஹிருணி ஆஷானா எனப்படும் சிறுமியும் , தெடிகமுவ பகுதியைச் சேர்ந்த நாளிகா நில்மினி எனப்படும் 37 வயதுடைய பெண்ணொருவரும் இதன்போது உயிரிழந்துள்ளனர்.
பொலிஸார் விபத்து தொடர்பில் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதுடன், அவர் பொலிஸாரின் பாதுகாப்பில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.