மூன்று வேளை உணவின்றி மக்கள் பட்டினியில் வாடுகின்றனர். திஸ்ஸமஹராம பகுதியில் 11வயதுடைய சிறுவன் பட்டினியால் உயிரிழந்துள்ளமை மிகவும் வேதனைக்குரிய விடயம். என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, எமது ஆட்சிகாலத்தில் இவ்வாறான துன்பியல் சம்பவங்கள் இடம் பெறவில்லை எனவும் தெரிவித்தார்.
கொடிகாவத்த முல்லேரிய பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கவில்லையாயின் பிற நாட்டவர்களின் தேவைகளை நிறைவேற்ற பதவி வகிக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. பிறிதொரு நாட்டு நிறுவனத்தில் சம்பளம் பெறும் ஒருவர் சபாநாயகரின் செயலாளராக எவரது நோக்கங்களுக்காக செயற்படுகின்றார் என்பதை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும்.
பிரதேச சபையும், மாநகர சபையுமே மக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளது. இன்று பொதுஜன பெரமுன கிராமிய மட்டத்தில் இருந்து பொதுமக்களுடன் தொடர்புகளை பேணி வருகின்றது. குறுகிய காலத்தில் பொதுஜன பெரமுன இரண்டு பிரதான கட்சிகளுக்கும் சவால் விடுக்கும் வகையில் எழுச்சி பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.
நாட்டின் அபிவிருத்தி தேவைகளுக்காகவே அரச முறை கடன்கள் பெற்றப்பட்டன. 30வருடகால சிவில் யுத்தம் குறுகிய கால ஆட்சியில் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது. அத்துடன் மிக விரைவாக அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் துறைமுகம், விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டன. துறைமுக நகரத்தின் அபிவிருத்திக்கு நாம் நிதி செலவழிக்காமல் ஒப்பந்தங்களின் ஊடாக குறித்த நிறுவனம் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
அபிவிருத்திகளை தொடர்ந்து 50 ஏக்கர் நிலப்பரப்பு அந்நிறுவனத்திற்கும் மிகுதி எமது நாட்டுக்கும் உரித்துடையாக்கவிருந்தது. ஆனால் நடப்பு அரசாங்கம் தற்போது 400 ஏக்கர் நிலப்பரப்பினை 99 வருடத்திற்கு குத்தகைக்கு வழங்கியுள்ளது. தேசிய வளங்கள் அனைத்தும் விற்றே அரசாங்கம் அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்கின்றது. பிற நாடுகளுடன் கைச்சாத்திடப்படுகின்ற ஒப்பந்தங்களில் என்ன உள்ளடக்கப்பட்டுள்ளது என்பது கூட மறைக்கப்படுகின்றது. வெளிநாட்டு இராணுவத்தினரை கொண்டு வர ஒருபோதும் சாத்தியமற்றது.
பட்டினியால் ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் வருத்தத்திற்குரியது. கடந்த அரசாங்கத்தில் இவ்வாறான சம்பவங்கள் ஏதும் இடம் பெறவில்லை. தற்போது நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளார்கள். கடந்த நான்கு வருடமும் அரசியல் பழிவாங்கள்கள் மாத்திரமே இடம் பெற்றது.
அதிகார போட்டியின் காரணமாகவும், பொறுப்பற்ற செயற்பாடுகளினாலும் முன்கூட்டி எச்சரிக்கை விடுத்தும் அடிப்படைவாதிகளின் தாக்குதலை அரசாங்கத்தினால் தவிர்க்க முடியவில்லை. இரண்டு வருட காலத்திற்குள் 30 வருட கால யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டு அனைத்து இனத்தவர்களும் சுதந்திரமாக வாழ முற்பட்டார்கள். மக்கள் மத்தியில் மீண்டும் சுதந்திரத்தை உருவாக்க ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றார்.