கிளிநொச்சி பாரதிபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களின் காலணிகளை நடுவீதியில் குவித்த அதிபரால் நேற்று குழப்பம் ஏற்பட்டது.
கிளிநொச்சி பாரதிபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களின் காலணிகளை பாடசாலைக்கு வெளியே பிரதான வீதியின் நடுவில் குவித்த அதிபரின் செயற்பாட்டினால் பாடசாலையில் நேற்று அமைதியின்மை ஏற்பட்டது.
பாடசாலையின் பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து அதிபரின் செயற்பாட்டுக்கு தங்களின் கடும் எதிர்ப்பினை வெளியிட்டபோது வலயக் கல்வித் திணைக்களம் தலையிட்டமையினால் நிலைமை சுமூகமாகியது.
நேற்றுக்காலை பாடசாலையில் இடம்பெற்ற ஒன்று கூடலின் போது தான் குறிப்பிட்ட காலணியை அணிந்து பாடசாலைக்கு சமூகம் அளிக்காத பதினைந்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் செருப்பு, சப்பாத்து, சான்ரில்ஸ் போன்றவற்றை அவர்களை கொண்டே பிரதான வீதியின் நடுவில் பாடசாலை வாசலுக்கு நேராக வீதியில் அதிபர் குவித்துள்ளார்.
இச் செயற்பாடு சில நமிடங்களில் பெற்றோர்கள் மத்தியில் சென்றடைய ஒன்று திரண்ட பெற்றோர்கள் அதிபருக்கு எதிராக தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
கடந்த கால வன்செயல்களால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்து தற்போதும் கூலித் தொழிலாளிகளாக வறுமையில் வாழ்ந்து வரும் தங்களை, அதிபரின் செயற்பாடு மிக மோசமாக இழிவுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கும் பெற்றோர்கள், தாங்கள் மூன்று வேளை நல்ல உணவை உட்கொள்ளவே தினமும் போராடிவருவதாகவும் இந்த நிலையில்தான் குறிப்பிட்ட சப்பாத்து அணியவில்லை என்ற காரணத்தினால் தங்கள் பிள்ளைகள் அணிந்து வந்து தேய்ந்து போன செருப்புக்களை ஊரே பார்க்கும் வகையில் நடுவீதியில் குவித்தது தங்களை மனதளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்றும் கவலை தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரின் கருத்தை பெற தொடர்புகொண்ட போது, அவர் கருத்து கூற மறுத்து விட்டார்.