தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்

552 0

201606291053282327_Convection-due-to-the-rain-lasts-for-2-days-in-Tamil-Nadu_SECVPFதமிழகம்-புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேல் அடுக்கில் நேற்று முன்தினம் உருவான காற்று சுழற்சி மேலும் வலுவடைந்து நேற்று காற்றழுத்தமாக மாறியது. இதனால் பல பகுதிகளில் மழை பெய்தது.

இந்த நிலையில் மத்திய வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்து காற்று சுழற்சி நேற்று மேலும் வலுவடைந்து தமிழகம், ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதிகளில் பரவியது. இதன் காரணமாக உருவான வெப்பச்சலனத்தால் தமிழகம்-புதுச்சேரியில் விடிய விடிய மழை பெய்தது. கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்ததுடன் கடல் சீற்றமும் காணப்பட்டது.

சென்னை மற்றும் புற நகரில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்தது கோயம்பேடு, அண்ணாநகர், அரும்பாக்கம், முகப்பேர், அம்பத்தூர், ஆவடி, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, அடையார், வேளச்சேரி, நுங்கம்பாக்கம், வேப்பேரி, வியாசர்பாடி, கொடுங்கையூர், மாதவரம் மணலி, எண்ணூர், திருவொற்றியூர், பாரிமுனை, சென்ட்ரல், எழும்பூர் என அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது மழை பெய்ததால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. காலையில் ஆங்காங்கே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த மழை இன்று காலையிலும் நீடித்தது. தொடர்ந்து விடாமல் மழைதூறல் விழுந்தபடி இருந்தது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் நுங்கம்பாக்கத்தில் 15 மி.மீ மழையும், விமான நிலையத்தில் 29.6 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிறைந்த திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்துள்ள மழை அளவு வருமாறு.

பள்ளிப்பட்டு-58, அம்பத்தூர்-37, தாமரைப்பாக்கம்-34, பூண்டி-25.2, செம்பரம்பாக்கம்-25, செங்குன்றம்-23, சோழவரம்-22, திருவள்ளூர்-19, பொன்னேரி-18, பூந்தமல்லி-18, கும்மிடிப்பூண்டி-15, திருவாலங்காடு-14, ஊத்துக்கோட்டை-14, திருத்தணி-13, ஆர்.கே.பேட்டை-9, மொத்தம்-344.2 மி.மீட்டர் மழை இந்த மாவட்டத்தில் பெய்துள்ளது.

இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில் வெப்ப சலனம் நீடிப்பதால் இன்னும் 2 நாட்களுக்கு தமிழகம் புதுச்சேரியில் மழை பெய்யும் என்று தெரிவித்தனர்.

Leave a comment