தண்ணீர் இல்லாமல் ஓட்டல்கள், விடுதிகள் மூடப்படுவதை ஏற்றுக்கொள்ள மறுப்பது தன்னைத்தானே ஏமாற்றுவது போல்ஆகும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் நிலவுகின்ற வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் தமிழக மக்களை நிலைகுலையச் செய்திருக்கிறது. நகரங்கள் கிராமங்கள் என்று வித்தியாசம் இல்லாமல் அனைத்து பகுதிகளிலுமே தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. கல்லூரிகள் தொழிற்சாலைகள் வர்த்தக நிறுவனங்கள் என்று அனைத்து நிறுவனங்களுமே தண்ணீர் பற்றாக்குறை காரணமாக எப்போது மூடப்படும் என்கிற பயத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழக அரசாங்கமே என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறது என்பதுதான் உண்மை. மழை வந்தால் தப்பித்துக்கொள்ளலாம் என்று வருண பகவானை வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.
தண்ணீர் இல்லாமல் ஓட்டல்களும், விடுதிகளும், பள்ளிகளும், கல்லூரிகளும், மருத்துவமனைகளும் மூடப்படுவது எதார்த்தமாக நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்வு. ஆனால் அமைச்சர்கள் தரப்பில் அதை ஏற்றுக்கொள்ள மறுப்பது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வது போல் ஆகும். உண்மை நிலையை ஒப்புக்கொண்டு தீர்வுகளை காண முயற்சிப்பது தான் இப்போதைய தேவை.
தண்ணீர் பஞ்சத்திற்கு ஒரே காரணம் நன்றாக மழை பெய்யும் காலங்களில் அந்த தண்ணீரை சேமிக்க அதற்கான ஏற்பாடுகள் இல்லாததுதான். வந்திருக்கின்ற தண்ணீர் பிரச்சனை இயற்கையாக உருவானது அல்ல மனிதனால் உருவாக்கப்பட்டது தமிழக அரசு அதிகாரிகளும் தமிழக அமைச்சர்களும் தமிழகத்தை பகுதி பகுதியாகப் பிரித்துக் கொண்டு தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்கு முழு முயற்சி எடுக்க முன் வந்தால் தான் ஓரளவாவது தமிழகத்தை காப்பாற்ற முடியும்.
தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி அனைவருடைய கருத்தையும் கேட்டு தேவையான தண்ணீரை தேவையான இடங்களுக்கு உபயோகிப்பதற்கு தாமதமில்லாமல் திட்டமிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வித்தியாசம் பார்க்கக் கூடிய நேரம் இதுவல்ல அரசாங்கம் தமிழகத்தின் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க எந்த வகையில் எங்களை உபயோகப்படுத்திக் கொள்ள முன் வந்தாலும் நாங்கள் அதற்காக பணியாற்ற காத்திருக்கிறோம். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை மட்டும் அல்ல அனைத்து இயக்கங்களையும் உபயோகப்படுத்திக் கொள்ள அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.