தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக கழிப்பறையை பயன்படுத்த வணிக வளாகங்களில் சென்னை வாசிகள் சிலர் ஏறி, இறங்கி வருகின்றனர்.பருவமழை பொய்த்து போனதால் சென்னைக்கு தண்ணீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் முற்றிலும் வறண்டுவிட்டன. இதனால் தலைநகர் சென்னை தண்ணீர் பஞ்சத்தின் பிடியில் சிக்கி தவிக்கிறது.
சென்னைக்கு ஒரு நாளுக்கு 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் திணறி வருகின்றன.
தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தங்கும் விடுதிகளும் மூடப்பட்டு வருகின்றன. சென்னையில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் காலிக்குடங்களுடன் வீதி, வீதியாக பெண்கள் சுற்றித்திரியும் அவலம் இன்னும் தொடரத்தான் செய்கிறது.
தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு தப்பாத துறைகளே இல்லை என்று சொல்லலாம். சங்கிலி தொடர் போன்று ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து துறைகளுமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சில ஐ.டி. நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. சில நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை வீட்டில் இருந்தப்படியே பணி செய்யவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. செயல்பட்டு வரும் சில ஐ.டி. நிறுவனங்களும், ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் தட்டுகளை சாப்பிட கொண்டு வரவேண்டும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும் என்று அடுக்கடுக்கான உத்தரவுகளையும் ஊழியர்களுக்கு பிறப்பித்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதால் மக்கள் அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். பணம் செலவழித்து தனியாரிடம் தண்ணீர் வாங்க முடியாமல் கூலித்தொழிலாளர்கள், குறைந்த வருமானம் உடையவர்கள் தவித்து வருகின்றனர்.
தண்ணீருக்கு அவர்கள் அரசை மட்டுமே நம்பி இருக்கவேண்டிய நிலை தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
தனியாரிடம் அதிக பணம் கொடுத்து தண்ணீர் பெற முடியாதவர்கள் குடிநீர் மற்றும் கழிப்பறை பயன்பாட்டுக்காக வணிக வளாகங்கள், பெரிய அளவிலான பல்பொருள் அங்காடிகள், ரெயில் நிலையங்கள், தியேட்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள், பயணிகள் போர்வையில் வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடிகள், தியேட்டர்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் அதிகமானோர் ஏறி, இறங்குவதை காணமுடிகிறது.
ரெயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட ரெயில்களில் சிலர் கழிப்பறை தேவைக்காக பயன்படுத்தும் நிலை இருக்கிறது.
இதேபோல தனியார் கம்பெனிகள், நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் சிலர் வேலை நேரம் தொடங்குவதற்கு முன்பே அங்கு சென்று கழிவறை, குளியலறை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.
கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் வேறு வழியின்றி தாங்கள் வேலை பார்க்கும் அலுவலகத்தில் உள்ள குளியலறை, கழிவறைகளை பயன்படுத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக தனியார் கம்பெனி ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர்.
தண்ணீர் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் சிலர் குளிப்பதற்கு ரெயில் நிலைய குழாய்களை பயன்படுத்தி வருகின்றனர். சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகள் அருகே, ரெயில் பெட்டிகளில் பயன்படுத்தப்படும் தண்ணீரை நிரப்புவதற்கான குழாய்கள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த குழாய் மூலம் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரெயில்களுக்கு தண்ணீர் நிரப்பப்படும்.
இந்த குழாய்களில் வரும் தண்ணீரை எழும்பூர் ரெயில் நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில் உள்ள மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர். எழும்பூர் ரெயில் நிலையத்தின் அருகே உள்ள மக்கள் தாங்கள் குளிப்பதற்கும், துணிகளை துவைப்பதற்கும் இந்த குழாய்களை பயன்படுத்தி வருகின்றனர்.
ரெயில் நிலையங்களிலே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில் பொதுமக்கள் ரெயில் பெட்டிகளுக்கு நிரப்பப்படும் தண்ணீரை பயன்படுத்துவது ரெயில்வே அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.