கல்முனை பிரச்சினைக்கு அரசியலமைப்பிற்கும், எல்லை நிர்ணய சட்டமூலத்திற்கும் அமைவாகவே தீர்வுகாண வேண்டும். அதற்கமைய இப்பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
பிரதேசமொன்றின் எல்லைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் போது அப் பிரதேச அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரினதும் அபிப்பிராயங்கள் பெறப்பட வேண்டும்.
கல்முனை தொடர்பில் 1993 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும் அது நிதி விதிமுறைகளின் கீழ் இணைத்து, செயற்படுத்தப்படவில்லை. இந்நிலையில் நாளை உரிய அதிகாரிகளைச் சந்தித்து இதுகுறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் பௌதீகவளப் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்ட நிர்வாகக் கட்டடத்தொகுதியை நேற்று புதன்கிழமை திறந்துவைத்த பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.