முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கு கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது.
குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இதன்போது கோட்டாபய ராஜபக்ஷ வைத்திய தேவைக்காக வௌிநாடு செல்ல வழங்கப்பட்டிருந்த காலத்தை நீடிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி எதிர்வரும் ஜூலை 24ம் திகதி வரை அவர் வௌிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டதாக நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.
டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.