கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதாக பிரதமர் பல தடவைகள் வாக்குறுதியளித்துள்ளார். ஆனாலும் தனது கடமையிலிருந்து பிரதமர் தவறிவிட்டார் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட எம்.பி. கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மதுவரி கட்டளை சட்ட விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கு பிரதேசத்தில் தற்போது மிகவும் பாரதூரமான பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது நாடளாவிய ரீதியில் பாரிய பிரச்சினையை ஏற்படுத்தக்கூடியது. கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது சம்பந்தமாக மாவட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 30 வருட காலமாக தரமுயர்த்தப்படாதுள்ள கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டுமென கடந்த திங்கட்கிழமையிலிருந்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். இந்தப்போராட்டத்தில் பௌத்த மதத்தலைவரான ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர், கிழக்கு இந்து மதகுருமார் ஒன்றிய தலைவர் சிவஸ்ரீ சச்சிதாநந்தக்குருக்கல், மாநகரசபை உறுப்பினர்கள் சந்திரசேகரம் ராஜன்,விஜேயரட்ணம் ஆகியோர் உணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது பௌத்த மதத்தலைவரான ரண்முத்துக்கல சங்கரத்ன தேரரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது. அனைத்து மதத்தலைவர்களும் ஒன்று சேர்ந்து கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தித்தரவேண்டுமென்று கோரியே உண்ணாவிரதமிருக்கின்றனர். ஒரு இனத்தை அடிமையாக வைக்கக்கூடாது என்பதற்காக ,ஒரு இனத்துக்கு செய்யப்பட்ட அநீதிக்காக நீதி கோருகின்றவர்களாக ,அந்த இனத்துக்கான உரிமையை கோருகின்றவர்களாக இன்று அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்த அரசிடம் நாம் பலதடைவைகள் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டுமென்ற பல கோரிக்கைகளை முன்வைத்தோம். பல கலந்துரையாடல்களை நடத்தியிருந்தோம். பிரதமர் கூட இதனை தரமுயர்த்தித்தருவதாக பல தடைவைகள் வாக்குறுதியளித்துள்ளார். ஆனாலும் தனது கடமையிலிருந்து பிரதமர் தவறிவிட்டார். எங்களை பல தடைவைகள் ஏமாற்றிவிட்டார். 1993 ஆம் ஆண்டு இந்த கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் 30 வருடங்களாக தமிழ் மக்களுக்கான இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
அடிப்படை மதவாதத்தை தோற்றுவித்து இஸ்லாமிய தீவிரவாதத்தை, இஸ்லாமிய ராஜ்ஜியத்தை உருவாக்குவதற்கு உறுதுணையாக நிற்பவர்கள் தான் இந்த தமிழ் மக்களுக்கான கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த தடை போடுகின்றனர். அந்தப் பிரதேசத்திலே இருக்கின்ற 46ஆயிரம் மக்களுக்கான அந்த உரிமை கிடைக்கக்கூடாது என்பதனை அவர்கள் நிலைநிறுத்தி அந்தப்பிரதேசத்திலே இஸ்லாமிய தீவிரவாதிகள் அதனைத்தடுத்து நிறுத்துகின்றனர். இந்த இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு, மத அடிப்படை வாதிகளுக்கு உறுதுணையாகவே இந்த அரசும் செயற்படுகின்றது. இதனை ஏறுக்கொள்ள முடியாது.
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தைதரமுயர்த்தக்கோருவது நியாயமான கோரிக்கையாகும். இதனால் தமிழ் மக்கள் பிரச்சினையை எதிர்நோக்குகின்றனர். அவர்களுக்குரிய நிர்வாகம் கிடைக்க வேண்டும், அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்குரிய சகல வளங்களும் உள்ளன. 29 கிராம சேவகர் பிரிவுகளையும் 234 ஆளணிகளையும் கொண்டதாக இருக்கின்றது. அதற்கான நிதி அதிகாரமும் காணி அதிகாரமும் மறுக்கப்பட்டுள்ளன என்று அரசு கூறுகின்றது. ஆனால் 30 வருடங்களாக தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.
இதற்கு காரணம் யார்?கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கூடாதென தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பினர் பள்ளிவாசலில் தீர்மானமெடுத்து அதற்கான அறிக்கையையும் வெளியிட்டனர். ஆகவே இந்த அரசு தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் கருத்தை ஏற்றுக்கொண்டுதானே கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தாதுள்ளது?தமிழ் மக்களுக்கான நீதி கிடைக்கக்கூடாதென தடுக்கப்பட்டுள்ளது. இந்த உயரிய சபையில் கூட நாம் தரமுயர்த்தல் வேண்டுகோளை விடுத்திருந்தோம்.எங்களது கட்சியும் இது தொடர்பில் பிரதமரை சந்தித்தது.ஆனால் வாக்குறுத்தி அளித்து அளித்தே பிரதமர் தமிழர்களை ஏமாற்றி விட்டார். அரசியல் தீர்வைத்தரவில்லை,குறைந்தபட்சம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவதற்கு கூடவா இந்த அரசு மறுக்கின்றது என தமிழ் மக்கள் எங்களிடம் கேட்கின்றனர்.
எமது மக்களுக்கு மறுக்கப்பட்ட நீதியை, உரிமையை இந்த சபை தர வேண்டும். கல்முனை நகரம் 95 வீதம் தமிழர்களின் பிரதேசம். இவர்களுக்கான உரிமையே மறுக்கப்பட்டுள்ளது. கல்முனை பிரதேசத்தை மாற்றும் நடவடிக்கை கூட எடுக்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகார சபையால் நாட்டப்பட்ட பெயர்ப்பலகை கல்முனை நகரத்திலிருந்து கல்முனைக்குடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது பெரும் அநீதி. இந்த அதிகாரத்தை,அங்கீகாரத்தை கொடுத்தது யார்? கல்முனைக்குடி என்பது வேறு,கல்முனை என்பது வேறு. தமிழர்களின் செறிவைக்குறைக்கவே இவ்வாறு செயற்படுகின்றனர். எனவே அரசு உடனடியாக இதில் தலையிட்டு கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்றார்.