அமெரிக்க நிறுவனம் ஒன்றில் சம்பளம் பெறுபவர் பாராளுமன்றத்தில் சபாநாயகரின் ஆலோசகராக இருப்பது பாராளுமன்றத்துக்கு பாரிய அச்சுறுத்தலாகும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன எம்.பி. நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
பிரசாத் காரியவசம் அமெரிக்க நிறுவனம் ஒன்றின் சம்பளத்தில் பாராளுமன்றத்தின் சபாநாயகரின் சர்வதேச ஆலோசகரக நியமிக்கப்பட்டுள்ளார். அவ்வாறானதொரு பதவி பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இல்லை. அப்படியிருக்கையில் அமெரிக்க நிறுவனம் ஒன்றில் சம்பளம் பெறுபவர் பாராளுமன்றத்தில் சபாநாயகரின் ஆலோசகராக இருப்பது பாராளுமன்றத்துக்கு பாரிய அச்சுறுத்தலாகும்.
ஏனெனில் கடந்த வாரம் வெளிநாட்டு தூதுவர்களை உங்கள் உத்தயோகபூர்வ வாசஸ்தலத்துக்கு அழைத்து கதைத்தீர்கள். அதில் எங்களுக்கு பிரச்சினையில்லை. அதற்கான அதிகாரம் உங்களுக்கு இருக்கின்றது. ஆனால் அந்த கலந்துரையாடலுக்கு நாட்டின் புலனாய்வு துறையின் பிரதானியை அழைத்திருந்தீர்கள். அதில் நாட்டின் பாதுகாப்பு தகவல் கசியும் அபாயம் இருப்பதால் அவரை அந்த இடத்துக்கு அழைக்கவேண்டாம் என்று யாரும் ஆலாேசனை தெரிவிக்கவில்லையா?. அதனால் பிரசாத் காரியவசம் அமெரிக்க அரசாங்கத்தால் சம்பளம் பெறுபவர். உங்களுக்கு ஆலோேசனை தருவது மாத்திரமா அல்லது எமது தகவல்களை வெளிநாட்டுக்கு விநியோகிப்பதற்குமா இருக்கின்றார் என்று கேட்கின்றேன்.
இதற்கு சபாநாயகர் விளக்கமளிக்கையில்,
இலங்கையில் இருக்கும் முஸ்லிம் தூதுவர்கள் மற்றும் இஸ்லாமிய அரசாங்கங்கள் இலங்கையின் நிலைமை தொடர்பாக அறிவிப்பொன்றை விடுத்திருந்தனர். அவர்களின் கவலையையும் தெரிவித்திருந்தனர். அதனால் நான் நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக விளங்கப்படுத்த முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்தோம். இதன்போது பொலிஸ்மா அதிபர் மற்றும் வேறு அதிகாரிகளும் வந்திருந்தனர். அவ்வாறு இல்லாவிட்டால் இலங்கைக்கெதிராக பாரிய வேலைத்திட்டம் ஒன்றை அவர்கள் ஆரம்பிக்க இருந்தனர்.
அதனால் இலங்கையில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றதை அவர்களுக்கு தெளிவுபடுத்தே அழைத்திருந்தோம். மாறாக எமது இரகசிய தகவல்களை வெளிப்படுத்தவல்ல. அத்துடன் பிரசாத் காரியவசம் முன்னாள் வெளிவிவகார அமைச்சின் செயலாளர். அவர் வேறு நாடுகளின் பாராளுமன்ற விடயங்கள் தொடர்பாக எமது உறுப்பினர்கள் அங்குசென்று கண்காணிக்கவும் பயிற்சி நடவடிக்கைகளை பெற்றுக்கொள்ளவும் தேவையான வேலைத்திட்டங்களுக்கு அமெரிக்காவின் நிறுவனம் ஒன்றின் புலமைப்பரிசில் பெற்றுள்ளார். அவர் எனக்கு உதவியாக இருக்கின்றார். அவ்வாறு இல்லாமல் எமது ரகசியங்களை வெளிநாடுகளுக்கு விநியோகிப்பதற்கு அவர் செயற்படுவதில்லை என்றார்.
இதன்போது மீண்டும் எழுந்த தினேஷ் குணவர்த்தன, முன்னாள் வெளிவிவகார செயலாளர் ஒருவரை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் சம்பளத்தில் பாராளுமன்றத்தில் வைத்திருக்கவேண்டுமா. பாராளுமன்றத்தால் அவருக்கு சம்பளம் வழங்கி வைத்திருந்தால் பிரச்சினை இல்லை என்றார்.
அதன்போது எழுந்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ், சுயாதீன பாராளுமன்றத்தில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றினால் சம்பளம் வழங்கும் ஒருவரை வைத்துக்கொள்ள முடியாது. அதுமுறையில்லை. பாராளுமன்றத்தால் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுத்தால் பிரச்சினை இல்லை. இல்லாவிட்டால் பாராளுமன்றத்தின் கெளரவம் வெளிநாட்டு சக்திகளுக்கு கீழ்படிகின்றது என்ற சந்தேகம் ஏற்படும் என்றார்.
இதன் சபாநாயகர் பதிலளிக்கையில் ஜனாநாயகத்தை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டத்துக்காக அந்த நிறுவனத்தின் நிதியில் பாராளுமன்ற உறுப்பினர் 70க்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டு சுற்றுலா சென்றிருக்கின்றனர். பயிற்சிகளுக்கு சென்றுருக்கின்றனர். இவை அனைத்தும் ரகசியங்களை வழங்க செல்லவில்லை என்றார்.
இதன்போது எழுந்த பிரதமர், அமெரிக்காவால் உதவி பெற முடியாவிட்டால் டிஸ்னி உலகில் இருந்து உதவி பெற்றுக்கொள்ளுங்கள் என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.
இதன்போது எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினர் காமினு லாெக்குகே தெரிவிக்கையில்,
வெளிநாட்டு நிதியில் சுற்றுலா செல்ல எனக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை. நான் அதில் செல்லவும் இல்லை. என்றார்.
அதற்கு சபாநாயகர் பதிலளிக்கையில் முதல்தர ஆசனத்தில் இங்கிலாந்துக்கு செல்ல என்னிடம் நீங்கள் கேட்டு, சென்று வந்தீர்கள். அவ்வாறு சென்றுவந்து தற்போது ஏன் பொய் சொல்கிறீர்கள். பொய்சொல்ல வெட்கப்படவேண்டும் என்றார்.
இதன்போது நிமல் லான்சா எழுந்து, யார் வேண்டுமானாலும் சம்பளம் கொடுத்தால் நீங்கள் யாரைவேண்டுமானாலும் ஆலாேசகராக நியமித்துக்கொள்வீர்களா? என்றார்
அதற்கு சபாநாயகர், முட்டாள்த்தனமான கேள்விகளை சபையில் கேட்கவேண்டாம். சபையின் கெளரவத்தை பாதுகாத்து பேசுங்கள் என்றார்.