தமிழக மக்களின் நலனுக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட அரிய முயற்சிகளை மு.க.ஸ்டாலின் அழிக்க முயற்சிக்கிறார் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் டெல்லி பயணத்தின்போது தமிழக நலனுக்காக முன்வைத்த உரிமைக்குரலை விமர்சிப்பது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் குதர்க்க புத்தியையும், கோயபல்ஸ் முயற்சியையுமே காட்டுகிறது.
கூட்டம் நடப்பதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகத்தின் உடனடி தேவைகளை தொகுத்து, கோரிக்கை மனு ஒன்றை யும் அளித்திருக்கிறார். அந்த கோரிக்கைகளின் தொகுப்பு ஆகியவற்றையெல்லாம் மு.க.ஸ்டாலின் தெரிந்து கொள்ளாமல், தனது கட்சிக்காரர்களின் அராஜகத்தை மூடி மறைக்கவும், தமிழக மக்களின் நலனுக்காக முதல்-அமைச்சர் மேற்கொண்ட அரிய முயற்சிகளை மக்கள் பார்வையில் இருந்து அழிக்க முயற்சிக்கும் வண்ணம், வீண் அவதூறு பரப்பும் அறிக்கை ஒன்றை மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருப்பது காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என்பதே உண்மை.
பிரதமரிடம் அளித்த கோரிக்கை மனுவில், கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம், முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை, மேகதாதுவில் காவிரியின் குறுக்கே ஒருபோதும் அணை கட்டப்படக்கூடாது என்பதில் உறுதி, சென்னை பசுமை விமான நிலையம், சென்னை மெட்ரோ ரெயில் – கட்டம் 2, தமிழ்நாட்டிற்கான நிலுவை மானியங்கள் கோருதல், உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத்தை விடுவித்தல், சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் பிரதமரிடம், முதல்- அமைச்சர் விளக்கிக் கூறியிருக்கிறார்.
அதோடு, மத்திய உள்துறை மந்திரி, மத்திய நிதித்துறை மந்திரி, தரைவழிப் போக்குவரத்துத்துறை மற்றும் நீர் மேலாண்மைத்துறை மந்திரி ஆகியோரையும் சந்தித்து, தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை விரைந்து நிறைவேற்ற உதவ வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் கேட்டுக்கொண்டார். முதல்- அமைச்சர் வலியுறுத்திய காரணத்தால், கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற ஆவண செய்வதாகவும் அவரிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த உண்மைகளையெல்லாம் மூடி மறைத்து, தனது தி.மு.க. கட்சியின் நிர்வாகிகள் நாகர்கோவிலில் நடத்திய அராஜகத்தையும், சட்டத்தை மீறிய செயல்களையும் மக்கள் பார்வையிலிருந்து மறைத்துவிடும் நோக்கத்திலும், சிங்கப்பூர் செல்லும் அவசரத்திலும் முழு உண்மையையும் தெரிந்துகொள்ளாமல் மு.க.ஸ்டாலின் அவதூறு பரப்பி அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
ராகுல்காந்தி கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என்றும், தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக 50 ஆண்டுகாலம் போராடி அண்மையில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்றும் பேசியதை இதுநாள்வரை மு.க. ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை.
அதைக் கண்டிக்காமலும் இருக்கும் அவர், தமிழ்நாட்டு மக்களுக்காக அயராது பாடுபடும் முதல்-அமைச்சரைப் பற்றி பேசுவதற்கு அறுகதை இல்லை. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஆற்றிய உரையையும், பிரதமரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை ஆவணத்தையும் சிங்கப்பூரிலிருந்து திரும்பி வந்ததும் நிதானமாக மு.க.ஸ்டாலின் படித்துப்பார்த்து தெளிவு பெறவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.